அண்மை

தீபாவளி எனும் உளவியல் உருவாக்கம் - தீசன்

தீபாவளி எனும் உளவியல் உருவாக்கம்

உலகமயமாக்கத்தின் விளைவால் தனிநபர் உடல் பல்வேறு ஊடகங்களால் தயார் செய்யப்படும் கலவையுடலாக இருக்கின்றது. வெவ்வேறு திசைகளிலிருந்து வடிவமாற்றத்திற்குள்ளான மண் நம் தட்டில் தினந்தோறும் உணவென்ற பேரில் படையலாகின்றது ஆனால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியான போக்கு உணவிலோ வாழ்க்கை நிகழ்விலோ எல்லாருக்குமானதாய் கிடைத்திருக்குமா? என்றால் ஆய்ந்துதான் பார்க்க வேண்டும். நிச்சயமாக இறக்குமதி செய்துப் பயன்படுத்தப்படும் பண்டம் எல்லோர் வீட்டிலும் புழங்கி இருக்காது என்று மட்டும் சொல்லலாம். நினைத்த நேரத்தில் நினைத்த உணவை/ உணர்வை மலிவாகவும் பெறமுடியும் இத்தகைய யுகத்தில் வாழும் நாம் ஒற்றை மனிதர் அல்ல என்பதை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். 

நாம் கலவையாக இருக்கிறோம். உடையிலும் உணவு முறையிலும் மேலை ஐரோப்பிய கீழை சீன, கொரிய தாக்கம் நம்மிடம் இருப்பது பச்சையாகத் தெரிகிறது. இதை பொருட்பயன்பாட்டின் மூலம் நேரே சுட்டிவிடவும் முடியும். உதாரணமாக, சட்டை, பேண்ட் என்பது மேலை நாட்டு உடை வடிவம், நூடுல்ஸ் கீழைத்தேய மக்களின் பழக்கம். குறிப்பாக சீனம், கொரிய சப்பானிய மக்களின் உணவு முறை. நம் வழக்கத்திற்கு மாறன பொருட்பயன்பாடு எப்படி நம்மிடம் இயல்பாக்கப்பட்டது? இத்தகைய “பண்பாட்டுப் பெயர்வு” எப்படி சாத்தியமானது? என்றால் அதுதான் வணிகத்தின் வலிமை. அரசு, உடைமை இது இரண்டிற்கும் அடிப்படை கருவி வணிகம். பண்பாட்டுப் பெயர்வை வணிகத்தால் மிகவும் வெற்றிகரமான முறையில் எங்கும் நிகழ்த்திக்காட்டிவிட முடியும். அதன் காரணம், பொது மனிதர்களுக்கு இயல்பாகவே இருக்கக்கூடிய புது உணர்வைப் பெறத்துடிக்கும் ஆவல். இது ஒரு குழந்தை தன் மலத்தின் (கழிவின்) வடிவம், நிறம், சுவை இவற்றை அறியக் குனியும் போதே துவங்கிவிடுகிறது. புதிதாக ஒன்றை மொழிஎல்லைக்குள் கொணர்வதற்கும் புதிதாக ஒரு உணர்வை பெறத்துடிப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்க முடியாது. நிற்க,

தீபாவளி எனும் பண்டிகை மற்ற பண்டிகைகளைப் போல கிடையாது. இது பெருங்கதையாடலைப் போல பெரும் உளவியல் உருவாக்கத்திற்கான அடிப்படை காரணியாக அமைகின்றது. பெரும் உளவியல் என்றது பல்வேறு நிறுவனங்கள் இவ்வுளவியல் உருவாக்கத்திற்குத் துணை செய்கின்றன என்பதற்காக. அத்தோடு நிண்ட கால உருவாக்கம் என்தற்காகவும் சொன்னேன்.

தீபாவளி வருவதற்கு முப்பது நாட்களுக்கு முன்னமே நமது கண்கள் வண்ணமயமான பல்வேறு விளம்பரங்களை பார்க்கத்துவங்கி விடுகின்றன. இனிப்புக் கடைகளிலும் ஆடை அணிகலன்கள் கடைகளிலும் தொங்கவிடப்படும் பெரிய பெரிய வண்ண விளக்குகள். ஈசல் போல பெருகி வரும் மக்கள் கூட்டம். சாலை நெரிசல். அதிக பணப்புழக்கம். பன்னிரண்டு மணிக்கு மேலும் கேட்கும் வாகன ஒலி. ஆங்காங்கே கேட்கும் வெடிச்சத்தம். தள்ளுபடி பதாகைகள். சிறப்புப்பேருந்துகள். கூடுதல் விடுமுறை. என்று எவ்வளவோ சொல்லலாம். 

கொஞ்சம் யோசிப்போம். தீபாவளி என்ற கருத்து அல்லாமல் அந்த குறிப்பிட்ட நாளைப் பார்த்தால் மற்ற நாட்களைப் போலவே அதுவும் ஒருநாள் தான். ஒருவெற்று நாளின்மீது கருத்தை ஏற்றுவதன் மூலம் எத்தனை உடல்களை வணிகத்தால் இயக்கிப் பார்க்க முடியும் என்பதற்கு தீபாவளி ஓர்சிறந்த உதாரணம். 

இதில் சிக்கலென்னவென்றால், இவ்வாறு கருத்துடலாக மாறவிரும்பாத நபர்களும் இத்திணிப்புளவியல் தாக்கத்திலிருந்து தவறுவதில்லை அல்லது ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. கொண்டாட்டக்கருத்து - வணிகம், வாழ்வாதாரத்தோடு இணைந்திருப்பதால் இதனை (தீபாவளியை) தவிர்க்க முடியாத சமூக கட்டாயத்துற்குள்ளாகும் உடல்களாக இவர்கள் மாறுகிறார்கள். இதனால் தான் சொல்கிறேன். தீபாவளி வெறும் பண்டிகை மட்டும் அல்ல. பெரும் உளவியல் உருவாக்கம் என்று. 

நான் என்பது நான் மட்டுமல்ல. இது பலவற்றால் உருவாக்கப்பட்ட உடல். பொருளாலும் கருத்தாலும். பொருளுக்கு எவ்வாறு பலவை மூலமாகின்றனவோ! அதே கருத்திற்கும் பொருந்தும். இக்கருத்தை நிறுத்த (நிலையாக்க) பலநிறுவனங்கள் உளவியலாக்கம் செய்வதுபோன்றே அதை மறுப்பதும் நிலையாக்கத்திற்கே துணைசெய்கிறது. சுருக்கச்சொல்வதானால்,

நான் தீபாவளி எனக்கு மட்டுமாவது வராமல் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் அந்த வெடிச்சத்தமும் வேட்டுப்புகையும் என்னைக் கட்டாயப்படுத்தியாவது எண்ண வைத்து விடுகிறது, இன்னும் கொஞ்ச நாளில் தீபாவளி என்று. அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். “தனியே ஒன்றை யோசித்துவிடத்தான் முடியுமா..? தனியே யோசிக்க நானென்ன தனி ஆளா?”

தீசன்

1 கருத்துகள்

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..



    இந்த தொல்லை தான் எல்லா பண்டிகையிலும் பெரிய தொல்லை.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை