எனது சிறுவயது முதலிருந்தே நான் திருவாரூர் மாவட்டப் மையப்
பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்ததால் கிராம வழக்குக் குறித்தும் அதனருமையும்
புரியாமல் போய்விட்டது. கிராமத்து வாழ்விற்கு வாய்ப்புமில்லை. அதையெண்ண எண்ண
வருத்தந்தான் வரும். திருவாரூர் நல்ல வளமிக்க வண்டல் மண் நிறைந்த பகுதி. வெந்தயம்,
கடுகு போன்றவைகளைச் சும்மாய் தூவிவிட்டு வந்தாலே போதும்,
நன்றாய் எழும்பும். கீரைக்காகவே வெந்தயம் வளர்ப்பார்கள்.
அதை முளைக்கீரை கூட்டாக்கும் போது சேர்த்துச் சமைப்பார்கள். இருந்தாலும் நெல் தான்
பிரதானம்,
உளுந்தும் உண்டு. வயலையும் விவசாயத்தையும் அடிப்படையாகக்
கொண்டுதான் எல்லாமே நடக்கும். கடைக்காரர்களிடத்தில், விளைச்சல் சரியில்லை என யாராவது சொன்னாலே போதும் 'தீவாளி வியாபாரம் ஓடாதோ' என பயப்படுவார்கள். திருவிழாக்களும் விளைச்சலை மையமிட்டது
தான்.
ஊரில் சித்திரையில் தான் கோவிலெங்கும் திருவிழா நடக்கும்.
கூட்டங்கூட்டமாக வெளியூரிலிருந்து உறவுக்காரர்கள் வருவார்கள். நோம்பி என்ற
சொல்லையெல்லாம் நாங்கள் கேட்டதேயில்லை. ஊரின் முஸ்லீம் மக்கள் விரதத்தை நோம்பு
என்பார்கள். திருவாரூரின் பல கிராமப்பகுதிகளில் தை மாதம் திருவிழா நடக்கிறதையும்
சமீபத்தில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன். பங்குனி உத்திரத்தன்று தேர்த்
திருவிழா நடக்கும். அதற்கும் கூட்டம் அலைமோதும். வீட்டுக்கு வரும் உறவினர்களுக்குத்
தேர் வடத்தைத் தொட்டுக் கும்பிட்டால் தான் நிம்மதி. ஒருமுறை தவறவிட்டிருந்தால் கூட
அந்த வருசம் முழுக்க புலம்பித்தீர்ப்பார்கள். நான் எனது எட்டு வயது வரை
திருவாரூரின் கிழக்குப் பக்கமாய், நாகப்பட்டினம் போகும் வழியில்தான் அடியக்கமங்கலம் எனும்
ஊரில் இருந்தேன். எனக்கு நினைவிருக்கும் வரை ஒரு கிராமவாழ்வை என்னால் அசைபோட்டுப்
பார்க்க முடிகிறது. வீட்டின் வாசலிலே முத்துமாரியம்மன் கோவில். அம்மா ஐந்து
மணிக்கே எழுந்து, கோவில் வாசலுக்கும் இல்லாமல் வீட்டு வாசலுக்கும் இல்லாமல்
இரண்டுக்கும் பொத்தாம் பொதுவாய் ஒரு இடத்தில் பெரிய கோலத்தைப் போட்டுவிடுவார்கள்.
நடுவில் பூசணிப்பூ ஒன்றையும் வைப்பார்கள். அம்மா கோலம் போடுவதை முறைப்படி
கற்றவர்கள். பெரிய பெரிய புள்ளிக்கோலத்தைக் கூட செத்த நேரத்தில்
போட்டுவிடுவார்கள். நான் எழுந்த பிற்பாடு டீ குடித்துக்கொண்டே அக்கோலத்தைப்
பார்ப்பது. பால் காரர் கருக்கல்லே வந்துவிடுவார். தாத்தா ஒரு லாக்டோ மீட்டர்
வைத்திருப்பார். பொதுவாய் லாக்டோ மீட்டரெல்லாம் பால் பண்ணையில் தான் இருக்கும். வாங்கும்
ஒரு லீட்டர் பாலுக்காக வீட்டிலே அதை வாங்கி வைத்திருந்தார். கருக்கல்லே எழுந்து,
வரும் பாலில் போட்டுப் பார்ப்பார். அளவை சரியாய் இருந்தால்
தான் பால். இல்லையென்றால் அன்று பாலும் இல்லை அன்றிலிருந்து அந்த பால்காரரும்
இல்லை. நிறுத்திவிடுவார். எங்கள் வீட்டுக்குப் பால்காரர்கள் வேண்டா வெறுப்போடு
தான் வந்திருக்கனும். 'கொஞ்சோண்டு பாலையும் மீட்டர் போட்டு வாங்குவாங்க'
என்று அம்மா சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.
எட்டு மணிக்குள்ளாகவே வீட்டுக்குக் கீரை,
காய்கறியெல்லாம் விற்க வந்துவிடுவார்கள். அம்மா அவற்றைப்
பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். கீரை விற்கும் அம்மாவின் குரல் நீண்டு கேட்க
கேட்க நானும் அதுபோலவே கத்திப்பார்ப்பேன். கொஞ்ச நேரத்திலே சோப்பயும் துண்டையும்
தூக்கிக் கொண்டு குளத்திற்கு ஓடிடுவோம். படித்துறை, ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும்
இருக்கும். பெண்களுக்குள்ள துறை கொஞ்சம் சிறிது. றோட்டில் இருந்து பார்த்தாலும்
தெரியாது. குளக்கரைக்குப் பக்கத்திலே மளிகைக் கடை இருக்கும். டீக்கடை இருக்கும்.
பேருந்து நிறுத்தமும் இருக்கும். பேருந்தில் இருந்து பார்த்தால் குளிப்பது
அப்பட்டமாய் தெரியும். ஒவ்வொரு பேருந்து வரும் போதும் பரக்கபரக்க குளத்திற்குள்
சென்று ஒளிந்து கொள்வோம். பேருந்துபோன பிற்பாடு வெளியே வருவோம். ஆடையில்லாதோரை ஆடை
போட்டிருப்போர் பார்த்தால் தானே அவமானம். அப்போது மான அவமானமெல்லாம் எங்களுக்குத்
தெரியாது. எல்லாம் ஓர் விளையாட்டு.
குளம் அப்படியே பச்சையாக இருக்கும். குளத்தைச் சுற்றி உள்ள
தூங்குமூஞ்சி மரம் தான் அப்படியொரு மாயையைத் தருகிறதோ என்று நினைத்திருக்கிறேன்.
ஒருமுறை தண்ணியைக் கையால் அள்ளிப்பார்த்தப் போதுதான் விளங்கியது. குளமே பாசி.
குளித்து முடித்து பள்ளிக்குக் கிளம்பிடுவோம். அம்மா சுடசுட
இட்லி கட்டித் தருவார்கள். அப்பா வண்டியில் ஊரைப் பார்த்துக் கொண்டே திருவாரூர்
போவது. மாலைவரை பள்ளி தான். மீண்டும் அப்பாவே வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
மாசி மாதம் ஊரில் காமுட்டி என்றொரு பூசை இருக்கும். ஊரின்
ஒதுக்குப்புறமாய் அதைச் செய்வார்கள். இரவு தான் நடக்கும். அந்த பூசையில் பெண்கள்
கலந்துக்கொண்டதாய் எனக்கு ஞாபகம் இல்லை. தாத்தாவிடம் எதற்கு இந்த படையல் என
ஒருமுறை கேட்டபோது 'பேய விரட்ட' எனச்சொல்லி வாயடைத்திருக்கிறார். ஆனால் அது காமனைக்
கொல்லும் நிகழ்வு என பின்னே தெரிந்து கொண்டேன்.
சித்திரை பாதிக்குப் பிறகு ஊரில் ஒருநாள் மட்டும்
மசானபுத்திரர் வருகையும் இருக்கும். சுடுகாட்டில் இருக்கும் சமீபத்து
சிதையிலிருந்து எலும்பு கடித்து ஊர் முழுதும் சுற்றும் மசானபுத்திரர்,
பார்க்கவே பயமாக இருக்கும். வேசம் கட்டியவர் சாராயம்
குடித்து இருப்பார். கண்ணுமண்ணு தெரியாமல் ஆடுவார். தகர சூலத்தைக் கொண்டு வசமாகச்
சிக்குவோர் முதுகில் பொளிச் பொளிச் என்று வைப்பார். சாமிக்கிட்ட என்ன வம்பு என்று
ஊராரும் பேசாமல் வாங்கிக் கொள்வார்கள். சிறுவர்கள் மசானபுத்திரரின் பின்னங்கால்
வரை தொங்கும் ஜடையைப் பிடித்து இழுத்துவிட்டு ஓடி ஒளிவார்கள். மசானபுத்திரரும்
விடாது அவர்களைத் துரத்தும். அது உடல் முழுதும் கரு வண்ணத்தை அப்பி இருக்கும்.
இடுப்பில் சிவப்புத்துண்டு ஒன்று. கையில் சூலம். காட்டேரி போன்று முடி. நாக்கைத்
துறுத்திக்கொண்டு எல்லாரையும் விரட்டும், அடிக்கும். மசானபுத்திரர் வரும்போது பெரும்பாலும் பெண்கள்
எல்லாம் வீட்டுக்குள் இருப்பார்கள். அங்கும் இங்கும் சுத்தினாலும் எல்லார்
வீட்டுக்கும் வந்து மசானபுத்திரர் மை வைக்கும். வெளியே யாரும் வராதபட்சத்தில்
மசானபுத்திரர் வீட்டுக்குள்ளும் வரும். எங்கள் வீட்டுக்கு அப்படியொருமுறை
வந்துள்ளது. திடுதிடுவென வீட்டுக்குள் ஓடி வந்த கறுப்பு உருவத்தைப் பார்த்து
எனக்கு நடுக்கு ஜொரமே வந்துவிட்டது.
கொஞ்ச காலத்திலே எல்லாம் மாறிப்போய் விட்டது. நாங்களும்
திருவாரூருக்கு வந்துவிட்டோம். சொல்லப்போனால் அடியக்கமங்கலத்தில் இருந்த
பொழுதுகளில் முக்கால்வாசி எனக்கு மறந்தே போய்விட்டது. இப்போது அடியக்கமங்கலத்தில்
இதுபோன்ற முறைகளெல்லாம் இல்லையாம். சித்திரை திருவிழா மட்டும் உண்டு.
திருவாரூருக்கு வந்தப்புதிதில் எனக்கு ஒன்றுமே தெரியாது.
பக்கத்தில் தான் பள்ளிக்கூடம் அதற்கே எனக்கு போகத்தெரியாது. அப்படித்தான்
இருந்தேன். ஆனால் போகப்போக எல்லாம் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கொடிக்காத்தெரு,
பேபி டாக்கீஸ் ரோடு, அழகிரி காலனி, கட்டபொம்மன் தெரு, மஜீத்தோப்பு பகுதி மக்கள் குறித்து எனக்குச் சொல்லப்பட்ட
பயங்கரமான கதைகளால் நான் அந்தப்பக்கம் போகவே பயந்து நடுங்குவேன். எதேட்சையாக அந்த
பகுதிகளுக்குச் சென்றால் கூட பாதுகாப்பு இல்லாதது மாதிரி தோன்றும். சோழா
தியேட்டரில் இரவு ஒருமணிக்கு மேல் படம் பார்த்து வரும் மக்களின் கழுத்தில் கத்தி
வைத்துப் பணம் பறிப்பது, பெண்ணாக இருந்தால் தூக்கிக்கொண்டு தெருக்குள் ஓடி
மறைந்துவிடுவது, சாக்கைக் கொண்டு பிள்ளைகளைப் பிடித்து விற்பது என ஒன்றாயிரண்டா நான் கேட்டு
பயந்தக்கதை.
அந்த பகுதியில் வாழும் மக்களெல்லாம் விளிம்புநிலை - தலித்
மக்கள். பெரும்பாலும் தினக்கூலியாக இருப்பவர்கள். திருவாரூரில் இருக்கும்
மேட்டுக்குடி மக்களுக்கு இந்தத்தெரு பேர்களைக் கேட்டாலே அலர்ஜியாய் இருக்கும்.
பள்ளி வாத்தியார்கள் தெருப் பெயர் கேட்டே ஆள் பார்த்துப் பழகுவார்கள். இருந்தாலும்
பள்ளிக்கூடத்தில் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் அந்த பகுதி
தோழர்கள்தான். பறை வாசிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருக்கும் அவர்களுடன்
பழகி பழகி எதைப்பார்த்தாலும் தாளம் போடத்தான் தோணும். ஒருமுறை நான்,
எனது நண்பனது இறுக்கமான முதுகில் கையைக் குவித்து அடிக்கும்
தொப்பி ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளித் தலைமை ஆசிரியைப் அதைப்
பார்த்துவிட்டார். பல்லைக் கடித்துக் கொண்டுவந்து என்முதுகில் படார் படார் என
வைத்தார். அதிர்ச்சியில் 'டீச்சர்…டீச்சர்' என ஒடுங்கிக்கொண்டே சாய்ந்த என்னை காலால் உதைத்து 'பறப்பயலாடா நீ' என்று நான் எதோ மகாபாவம் செய்ததுபோல் கத்தினார். அவமானமாக
இருந்தது. தலைமை ஆசிரியரிடம் கெட்டபேர் வாங்கிவிட்டோமே என்று தோன்றியது. அவர்
இன்னும் சாகவில்லை. திருவாரூரும் இன்னும் மாறவில்லை. அந்தத் தெரு மக்களுக்கு ஊர்
தரும் மதிப்பு அவ்ளோதான்.
நில அமைப்பும் பருவகாலமும்
திருவாரூர் முழுதும் நீர்ச்சத்து மிகுதி. ஆவணியில்
தொடங்கும் மழை கார்த்திகை வரையில்கூட பெய்யும். மார்கழியிலே வெயில் தெரியும்.
சுல்லென்று இருக்காது, ஆனால் எவ்வளவு வெயில் அடிக்கிறதோ அவ்வளவு பனி இரவில்
காட்டும். பனியும் மாசி வரை இருக்கும். பங்குனியில் தான் கடும்வெயில்
ஆரம்பிக்கும். அது வைகாசி வரை தொடரும். வைகாசி இறுதியிலே காத்தடிக்கவும்
தொடங்கிவிடும். ஆனி, ஆடி முழுதும் காத்து தான். ஆனியில் தான் தென்மேற்குப்
பருவகாற்று தொடங்கும். ஆவணியில் காத்தோடு மழையிருக்கும். புரட்டாசியில்
வடகிழக்குப் பருவகாற்றும் தென்மேற்குப் பருவகாற்றும் ஒன்றையொன்று மோதி
சுழிக்காற்றை உண்டாக்கும். அதுமுடிந்த பிற்பாடு வடகிழக்குப் பருவகாற்று தான்.
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள். தொல்காப்பியத்தில் வருவதுபோல எங்கள் ஊரில்தான் ‘வானோ
உருமுது’ என்பார்கள். கார்த்திகையில் புயல்கூட வரும். முன்பு கஜாப்புயலும்
கார்த்திகையில் தான் வந்தது. தையிலே பொங்கல் நடக்கும். அதைவிட திருவாரூர்
வட்டாரத்தில் தீபாவளிதான் விமர்சையாகக் கொண்டாடுவார்கள். ஆற்றங்கரைக்கு அருகில்
எல்லா இடத்திலும் வீடுகள் இருக்கும். சொல்லப்போனால் ஆற்றின் அகலத்தையே குறைக்கும்
அளவிற்கு வீடுகள் பெருகி வருகிறது. திருவாரூர் தெருக்கள் சாதிகளால் நிரம்பியது.
எங்கள் ஊரான அடியக்கமங்கலத்துத் தெருக்கள் பேரே, செட்டித்தெரு, ராஜாத்தெரு, பாப்பாரத்தெரு, பறத்தெரு, குடியானத்தெரு, மரக்காயத்தெரு இப்படித்தான் இருக்கும். ஊர் பொதுக்குளம்
பேர்,
செட்டிராஜன் கேணி. ஊர்மக்கள் அதை செட்ராசங்கணி என்பார்கள்.
திருவாரூரில் இவ்வாறு சாதிப்பெயர் தெரியும்படி வெளிப்படையாக இல்லை. ஆனால் இந்தத்
தெருக்காரன் இந்த சாதியாகத்தான் இருப்பான் என்று எல்லாருக்கும் தெரியும்.
காலவோட்டத்தால் இப்போது அதெல்லாம் மாறிவிட்டது என்று நானே என்னைத் தேத்திக் கொள்கிறேன். வேறென்ன செய்வது?
தீசன்