அண்மை

இறைவி, கொட்டுக்காளி வழி பெண்ணுடல் எனும் கூடுகள் - சிவனி

இறைவி, கொட்டுக்காளி வழி பெண்ணுடல் எனும் கூடுகள் - சிவனி

இறைவி - கொட்டுக்காளி இவ்விரு திரைப்படங்களிலும் இந்தியப் பெண்களிடம் இச்சமூகம் ஏற்படுத்தியுள்ள ஏற்படுத்துகின்ற ஏற்படுத்தும் ஒழுங்குகளை மட்டுமே பேசவருவதாகத் தெரியவில்லை. பொதுவாகப் பெண்கள் எல்லா இடத்திலுமே ஆண்களால் மட்டுமல்ல அனைத்தாலும் வஞ்சிக்கப்டுகின்றனர். என்னைக் கேட்டால் பெண்களுக்கு விடுதலை என்பதே கிடையாது என்றே கூறுவேன். ஏனென்றால் அதில் பல்வேறு புரிதலுக்கான சிக்கல்கள் உள்ளன. இதுவரை அதற்கான முன்னெடுப்புகளைத் தெரிந்துக் கொள்வதற்கே பெண்கள் தனது வாழ்க்கையின் முக்கால்பங்கு காலத்தைச் செலவிடுவதாகத் தெரிகிறது. நான் சிறுபான்மையாகப் பொருளாதார சுதந்திரத்தை மட்டுமே பெற விரும்பும் பெண்களைக் கருத்தில் கொண்டு பேசவில்லை.

முக்கால்பங்கு காலம் என்பது பெண்களுடைய வயதை வைத்து அல்ல. தான் சுயச்சையாக வாழ, பெண்களுக்குத் தேவைப்படும் காலத்தை முக்கால்பங்கு என்கிறேன். என்னளவிலே கூறி இக்கூற்றினை கானல்நீராக்கவும் விரும்பவில்லை.

முக்கால்பங்கு காலம் என்பது என்ன தான் பெண்கள் தனித்து வாழ்கிறேன், சுயத்தினை நேசிக்கிறேன், இன்னும் சொல்வதானால், “வேறு யாரும் நான் வாழும் காலத்தில் பெண் விடுதலை மற்றும் பிற முற்போக்கான கருத்துகளைப் பேசவில்லை. ஆதலால் நான் அதனை என்மேல் போட்டுக் கொண்டு செயல்படுகிறேன். அதற்கு நான் தகுதியானவன் தானா என்று கூட தெரியவில்லை” என்று பெரியார் கூறுவது போல தாந்தான் இவ்வுலகத்தில் முதன்முதலாக சுயச்சையாக வாழ போகிறோம் என்ற மமதை நீங்குவதற்கு முக்கால்பங்கு காலம் எடுக்கிறது.

இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வாழ தகுதியால்லாதவர்கள், தகுதியில்லாததால் யாரையோ எதையோ சார்ந்து வாழ்கிறோம், சார்ந்து வாழ்தலால் சுயமரியாதையை இழக்கிறோம், சுயமரியாதை இழப்பதால் விரும்பியதைச் செய்யவோ அல்லது உருவாக்கிக் கொள்ளவோ நம்மால் முடியவில்லை என்று தனக்குள்ளாக ஏற்படும் கேள்விகளுக்குப் பதில் தேடியே முக்கால்பங்கு காலம் போய் விடுகிறது. இக்கேள்விகளுக்கு இடையில் நமக்கு வாழ்வது போல் தெரிந்தாலும் எல்லாம் அட்டவணை முறை வாழ்க்கைப் போல்தான் தோன்றும். ஆனால் அது உண்மையான வாழ்வாய் இருக்காது. பெண்களுக்கான வாழ்க்கையை அவர்கள் கடைசி வரை தேடிக்கொண்டே இருப்பார்களே ஒழிய வாழத் தலைபடமாட்டார்கள். ஆராய்ச்சி போல் ஆய்வு முடிவுக்கு வரும் என்று நினைக்கும் போதெல்லாம் இன்னொன்றைத் தேடி செல்லுவது போலத்தான் இது. இதனைப் பெண்கள் பெண்களுக்குள்ளேயே அடிமைப்பட்டு கிடப்பதாகவே எண்ணுகிறேன்.

இறைவி - கொட்டுக்காளி இத்திரைப்படங்களில் காண்பிக்கப்படும் பெண்கள் சுயமரியாதையை விரும்பி நிற்பார்கள். ஆனால் வாழ முடியாது. அதற்கான புறக்காரணங்களாகச் சமூகத்தைக் கூறினாலும், அதுமட்டுமே என உறுதியளிக்க எவராலும் கூற முடியாது. ஏனெனில் காலம் காலமாகப் பெண்கள் பெண்களால் படும் துயரமே அதிகம், அதனை ஆண்கள் தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதில் நிம்மதி என்று பதில் சொல்ல முடியாது. பதில் இருந்தாலும் காண்பிக்க மாட்டார்கள். வரவிருக்கும் விளைவுகளால் பயம் அவர்களின் உயிரை அணுத்துகள் ஆக்குவது உறுதி. சில சமயங்களில் பெண்கள் தங்களின் வாழ்கையின் மீது உள்ள பிடிப்பில்லாமையும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். திரும்பினால் நான் கட்டாயமாக வாழ வேண்டிய இவ்வாழ்க்கை என்னைச் சிறை வைக்கும் என்றும், அவ்வாழ்க்கையில் அவர்கள் எடுக்கும் முடிவில் வீழ்ந்தால் கைக்கால் அசைக்கக் கூடிய பொம்மையாகிப் போவாளோ? என்றும் பயம், பதட்டம், மனக்குழப்பம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மணியம்மையைத் தவிர்த்து பெரியாரால் யாரையும் நம்ப முடியவில்லை. அதைப்போலத்தான் இத்திரைப்படங்களில் உள்ள பெண்களால், இவ்வாறு வாடிக்கையாக நடக்கக்கூடிய வாழ்வியல் கொடூரங்களை ஏற்று சகித்துக் கொள்ளும் அளவிற்கு, தன் சிந்தனை மீதும் சுயமரியாதை மீதும் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு நான் கூறும்போது பொதுவாக எல்லாருக்கும் தோன்றலாம், பெண்ணியவாதிகளில் பெண்கள் எவ்வளவோ பேர் துயர வாழ்க்கையை உடைத்தவர்கள் தானே என்று. ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனி வலிகள் என்று உணர வேண்டும். இந்நிலையை இவ்விரு படங்களிலுமே சரியான முறையில் கையாண்டிருப்பர்.

இறைவி திரைப்படத்தின் தொடக்கத்தில் பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே குடும்ப வாழ்க்கைக் குறித்த அவரவர் அனுபவங்களைக் கூறுவதாக அமைந்திருக்கும். அதில் ஒரு வயதான பெண் புலம்புவதாகவும் அவர் ஏன் இப்படி இருக்கார் என்றும், அதற்கு பதில் கூறுவதாக இன்னொரு பெண் அவர் அப்படித்தான்னு தெரியாதா உங்களுக்கு என்று கூறி கண்ணீரில் நனையாதிர்கள் என்று சலிப்பைக் காட்டுவாள். சில காட்சிகளில் புலம்பியப் பெண் கை, கால் செயலற்ற பெண்ணாகக் காட்சிப்படுத்தப்படுவாள்.

பெண்களின் வாழ்க்கைப் பெரும்பாலும் இப்படித்தான் அமைந்துள்ளது என்னும் சமயத்தில் இதிலிருந்து மறுபட்ட இளம்பெண் ஒருவரைக் காண்பிப்பர். அந்தப் பெண்ணின் வாழ்வு அவளால் உருவாக்கப்பட்டதாகவும், எது தேவை, தேவையில்லை என்பதை அவளே முடிவு செய்பவளாகவும் இருப்பாள். பகுத்தறிவைப் பயன்படுத்துவாள். இவ்வுலத்தில் அனைத்துமே நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனைப் பெறுவதும் பெறாமல் இருப்பதும் அவரவர்களின் ஆசையைப் பொருத்தது என்பதுபோல் இருக்கும்.

இதேபோன்று கொட்டுக்காளி திரைப்படத்திலும் இறுதியாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, காதல் வயப்பட்ட மற்றும் இச்சமூகத்திற்கு மறுப்பாக வாழ நினைக்கும் பெண்களைப் பேய் பிடித்தவர்களாய், திமிரு பிடித்தவர்களாய் காட்சிப்படுத்தியிருப்பர்.

அவர்களிடம் உள்ள மாற்று நீங்க சாமியாரிடம் அழைத்துச் செல்வர். அப்போது சாமியார் ஒருவர் பாதிக்கப் பட்டடதாகச் சொல்லப்படும் பெண்களின் அனைத்து உறுப்புகளையும் தடவுவதாகவும், அதனை அவளுடன் வந்த அனைவரும் பார்க்கும் வண்ணமும் காட்சி. அந்தத் தருணத்தில் பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படும் பெண் உணர்வில்லாதவளாகக் காட்டப்படுவாள். இவ்வாறு அவள் இருப்பது இச்சமூகத்திற்றகு அவள் கூறும் பதில் போன்று இருக்கும்.

அவள் இவ்வுலகத்திற்குக் கூறுவது, இந்த உடலைக் கொண்டு தானே என்னை இவ்வளவு சீர்குலைக்கிறீர்கள். சாமி என இவன் தொடும்போது உங்கள் கட்டுகள் காணாமல்போகிறதே என்பது போல் இருக்கும். உடல் கூடுகளாக எப்போது மாறுமோ? பெண் உடல் இப்போதும் அப்படித்தான் உள்ளது.

உடல் வெறுமனே ஒரு கூடு. காதலும் அதனைத் தொடர்ந்தக் காமமும் அற்றும் போகும், அடர்த்தியும் அடையும். எதையும் இப்படித்தான் என வரையறுக்க முடியாது என்பதே என் முடிவு. எல்லோருக்கும் காதல் தேவைப்படுவதில்லை. எல்லோருக்கும் காமும் தேவைப்படுவதில்லை. எல்லோருக்கும் இது தேவை, இது தேவையில்லை என்பதை அழுத்தப்படுத்தி அழுத்தப்படுத்தி தான் துர்நாற்றம் பிடித்ததாய் உள்ளது இவ்வாழ்க்கை.

யாருக்கு எது தேவையோ பாதிப்பின்றி எடுக்கவும், தேவையில்லையெனில் விட்டுச் செல்லவும் இவ்வுலகம் அனுமதித்தால் அதுவே வாழ்க்கை என்பதைக் கூறுவதாக இவ்விரு படங்களும் அமைந்திருக்கும்.

சிவனி

1 கருத்துகள்

புதியது பழையவை