அண்மை

நூலிலிருந்து வடிகட்ட முடியாத காட்சி - தீசன்

நூலிலிருந்து வடிகட்ட முடியாத காட்சி - தீசன்

பெர்க்லிக்கும் தெரிதாவுக்கும் உள்ள வேறுபாட்டை அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியவில்லை. அதற்கு இன்னும் எனக்கு வாசிப்புத் தேவைப்படலாம். ஆனால் இரண்டு அணுகுமுறையும் கருத்துமுதல்வாதமே. சிறுவேறுபாடு என்னவென்றால் தெரிதா இருமடி மும்மடி என்று போய்க்கொண்டே இருக்கிறார். பெர்க்லி தட்டையாகத் தெரிகிறார். அதனால் தான் அவர் சொன்னது சோலிப்சிசமாகிறதோ? தெரியவில்லை?. ஆனால் இரண்டு பேரும் ஒரு முக்கியமான இடத்தில் குவிகிறார்கள். அதுதான் “எல்லாமே நூல்” எனும் தத்துவம். இந்திய தத்துவ மரபில் இதைப்பற்றிய உரையாடலை சமணம் ஒன்றே நிகழ்த்தியிருக்கிறது. சப்தபங்கி என்று தத்துவ உரையாடலாக அறிவர்களுக்கும் யானை கதையாக பொதுவர்களுக்கும் சமணம் இதைத் தெளிவுப்படுத்தி உள்ளது. ஆனால் ஏனோ இப்படியான உரையாடல் போக்கு இந்தியாவில் வளர்ச்சியடையவில்லை. மேலை நாட்டில் பொருள் பற்றிய பேச்சி தொழிற்புரட்சிக்குப் பின் வெகுவாகக்கூடிய போது கருத்து மீதான அணுகுமுறைகளும் கூடி இருக்கின்றன. அதன் மிகச்சிறந்த அறுவடையாக தெரிதா இருக்கிறார். 


தெரிதா எல்லாத்தையும் நூல் (text) என்கிறார். மிகவும் அதிரடியாக நுழைந்த அணுகுமுறை. நூல் என்றவுடன் நம் மனத்தில் கொத்துக்காகிதமும் அதன் மேல் கீழ் அட்டையும் போன்றதான ஓர் உருவம் (Book) தோன்றிவிடக்கூடும். நூல் என்றது இங்கு அதுவன்று. பொருளைத் (Meaning) தரும் ஒரு பொருள் (Thing/ Object). இப்படிச் சொல்லலாமா? என்றெனக்குத் தயக்கமாக உள்ளது. சின்ன புரிதலுக்கு இப்போது இது உதலாம்.


நான் என் கண்களால் எதைப் பார்த்தாலும் உடனே அதன் பெயர் என் மனத்துள் தோன்றிவிடும். பெயர் தெரியாத ஒரு பொருளைப் பார்த்தாலும் அதன் உருவம், நிறம், அதன் சூழல் முதலியற்றை என்னால் புரிந்து கொள்ள முடியும். அப்படியும் முடியவே இல்லை என்றாலும் கூட “அது என்னவென்றே தெரியவில்லை” என்றாவது என்னால் சொல்ல முடியும்.


இப்படியாக ஒரு பொருளை, நிகழ்வை, உணர்வைப் புரிந்து கொள்ள என்னிடம் இருக்கும் ஒரே கருவி மொழிதான். அது எனக்கு அனைத்தையும் ஒரு நூலாக்கிக் காட்டுகிறது. அதாவது பொருட்களை (Objects) பொருள் (Meaning) தருவதாக மாற்றுகிறது. தமிழில் பொருள் எனும் சொல் பருப்பொருளைக் குறிப்பிட மட்டுமே பொதுவாகப் பயன்படுத்தப்படும். உதாரணமாக, பறவை என்பது பருப்பொருள் என்றால் பறவை எனும் பருப்பொருளின் பொருள் நுண்பொருளாகக் கொள்ளப்பட வேண்டும். பொருள் (Meaning) என்பது நுண்பொருள் எனும் உணர்வு யாருக்குமே இல்லை. மொழி ஒரு இசையாக இயங்குவதை என்னால் இந்த இடத்தில் தான் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. நாம் ஒரு பொருளைக் (Object) குறிப்பிட இன்னொரு பொருளை (சொல்/ மொழி) (Subject)  பயன்படுத்துகிறோம். ஆனால் அதை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத நிலையில் இருக்கிறோம். 


உயர்திணை எல்லாம் மக்கள் என்று விளங்குவதற்கும் மக்களாகிய கருத்து நிலைபெறும் இடம் உயர்திணை என்பதற்கும் எத்தனை நூற்றாண்டுகால தத்துவ இடைவெளி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? இந்த சின்ன விசயத்தைக்கூட விளங்கி கொள்ள முடியாத இழிநிலையில் எத்தனை கோடிபேர் இருப்பார்கள். 


பொருளானது கருத்தால் விளங்ககொள்ளப்படுகிறது எனவே இனி அது பொருளல்ல. நூல். 


என்னைப் பெற்றெடுத்தவர் அம்மாவாக என்னால் விளங்கப்படுகிறார் எனில் அவர் ஒரு நூல். அப்பா ஒரு நூல். வீடு ஒரு நூல். மக்களும் நூல். உணவு, உடை, நிகழ்வு, வாழ்க்கை, வயது, பாலினம், நட்பு, காதல் எல்லாமே இங்கு நூலாக இருக்கிறது. தோற்றம்/ வடிவம்/ அமைப்பு அந்தந்த நூல்களால் எழுத்தால் நிலையாக்கமாகிறது என்பார் தெரிதா. அதை Writing என்பார்.


உதாரணமாக, என் அப்பாவுடைய தோற்றம், குணம், நடை, உடை, அவரின் செயல்கள், அவரின் பெயர், விருப்பமான உணவு, விருப்பமான பாடல் இவை அனைத்திலுமே என் அப்பாவின் குறிப்பான் இருக்கிறது. அதுவும் பண்பாட்டோடு இணைந்து அப்பாவாக இருக்கிறது. இது நிலையற்றதாக ஒரு ஊசலாட்டத்தன்மையில் இருக்கிறது.


இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், என் அப்பாவுக்கு “கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி” பாடல் மிகவும் பிடித்தமான பாடல் என்று வைத்துக் கொள்வோம். இதை என்னிடம் ஒரு பூங்காவில் குறிப்பிட்ட ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கும் போது என்னிடம் சொன்னார் என்றும் வைத்துக் கொள்வோம்.


நான் என்றைக்காவது கடவுள் என்னும் முதலாளி பாடலைக் கேட்கும் போது தீடீரென்று என் அப்பா நினைவுக்கு வந்தால் அல்லது பூங்காவின் குறிப்பிட்ட அவ்விருக்கை அப்பாவின் நினைவைத் தந்தால்… அந்த பாடலோ (ஒலி) அந்த இருக்கையோ (பொருள்) வெறுமனே அந்த பாடலாகவும் பொருளாகவும் மட்டும் இல்லை. என் அப்பாவாக இருக்கின்றது.


இப்போது ஒரு பொருள் அதற்குரிய பொருளை மட்டும் தராமல் அதோடு தொடர்புடைய/ என்னால் தொடர்புபடுத்தப்பட்ட/ அப்பொருளுக்கே சம்பந்தம் இல்லாத இன்னொரு பொருளையும் தரும் போது அந்தப் பொருள் மொழியால் ஊசலாட்டத்திற்கு உள்ளாகிறது.


எனக்கு உன்ன பாத்தாலே இவ ஞாபகந்தான் வருது. இந்த இடத்துக்குப் போனாலே எனக்கு இதுதான் தோனுது. தீடீர்னு எனக்கு இந்தப்பாட்ட பாடனும்னு தோனது - இப்படியாக நாமோ நம்மைச் சுற்றி உள்ளோரோ சொல்லக்காரணம் பருப்பொருள் மீதான நுண்பொருளின் ஊசலாட்டமே.


//பிறகெப்படி இந்தப் பொருள் இதுதான் என்று பொதுசமூகத்தால் நிலையாக்கம் செய்யப்பட்டது? அவரவருக்குத் தோன்றும் பொருளில் (Meaning) தானே பொருட்கள் அர்த்தப்பட்டிருக்க வேண்டும்.?//


இதைத்தான் தெரிதா எழுத்து (Writings) என்கிறார். பொதுசமூகத்தால் மொழியால் பேச்சால் பொதுவாக்கப்பட்டவை. பேச்சு என்பது முன்னரே எழுதப்பட்ட எழுத்து என்பார் தெரிதா. இப்போதும் பொருளுக்கு நிலையான பொருள் உண்டு என்பதை தெரிதா ஏற்கவில்லை. அப்படியான உருவாக்கம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறார். அதற்குக்காரணம் எழுத்து. (கையெழுத்து இல்லை)


உங்கள் அருகே இருக்கும் நண்பர் வீட்டுக்குக் கிளம்பும் போது அவர் பென்சிலை மறந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்றால் அந்த நண்பர் அவர் வீட்டிலும் இருக்கிறார். இந்தப் பென்சிலிலும் இருக்கிறார் என்பார்கள் மேலை நாட்டுக்காரர்கள். இது ஒரு நல்ல உதாரணம்.


குறிப்பான்கள் பல குறிப்பான்களைச் சங்கிலி போன்று உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. இதைத்தான் தொல்காப்பியம், பொருட்குப் பொருள் தெரியின் அது வரம் பின்றே என்கிறது.


தெரிதா எல்லா பொருட்களையும் நூலாகப் பிரகடனப்படுத்திய போதுதான் பொருள் என்ற ஒன்று எப்படி இருக்கும் என்ற குழப்பம் எல்லோர்க்குமே தோன்றிற்று. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், பறவை என்ற பருப்பொருளை “பறவை” எனும் நுண்பொருள் இல்லாமல் என் கண்களால் பார்க்க முடியுமா? மொழி அதற்கு இடம் தருமா? 


உறுதியாக இல்லை என்பதுதான் விடை. மொழியற்ற கண் இங்கில்லை. பார்வையில்லாத கண் மொழியற்ற கண்ணாகிவிடாது. யோசித்துப் பார்த்தால் புலனறிவு எல்லாமே மொழிக்காகத்தான் இருக்கின்றன. புலனறிவு என்பதே மொழி தான். புலனறிவு பெறமுடியாதவர்கள் மொழியிலிருந்து தப்பிவிட்டதாக நினைக்க முடியாது. இதனால் என் புலனறிவால் எதைத் தெரிந்து கொண்டாலும் அது நூலில் அடங்கும்.


கண்களால் நாம் பார்க்கிறோம் ஆனால் பார்க்கமட்டும் தெரியவில்லை. காதால் எதையும் கேட்கிறோம் ஆனால் கேட்கமட்டும் நமக்குத் தெரியவில்லை. நுகர்வதோ சுவைப்பதோ உணர்வதோ நாம் அதன் பருப்பொருட்டன்மையோடு செய்யவே இல்லை. நாம் செய்யும் ஒரே செயல் - நூலாக்கம். நூலாக்கத்தைத் தவிர மொழிக்கு ஏதுவுமே தெரியாது.


காட்சி அளவையே நூலளவையாக இருக்கும்பட்சத்தில் காட்சியை எப்படி ஒரு அளவையாய் ஏற்பது?


தீசன்

________________


மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை.

மலையைப் பார்க்கிறேன்

சிலைக்காகும்

கோயிலுக்காகும்

பங்களாவின்

சுற்றுச் சுவர்க்காகும்

தாரோடும் வீதிக்கு

ஜெல்லிக் கல்லாகும்.

மலைச்சிகரம்

மனிதச் சாதனைக்காகும்.

எதெதோ தெரிந்தாலும்

மலையாகப் பார்க்கத் தெரியவில்லை. 

மலரைப் பார்க்கிறேன்.

புலரும் காதலுக்குத்

தூண்டில் முள்ளாகும்

அத்தர்க்காகும்

படத்துக்காகும்

எதெதோ தெரிந்தாலும்

மலராகப் பார்க்கத் தெரியவில்லை.

என்னைப் பார்க்கிறேன்

கண் காணாச் சமூகத்தை

நிலை நிறுத்தும் கல்தூண்.

பரிணாமத்தின் பனிச்சிகரம்

சந்ததியின் சங்கிலியில்

காலம் காட்டும் கடைக்கரணை

எதெதோ தெரிந்தாலும்

நானாகப் பார்க்கத் தெரியவில்லை

(தெரியவில்லை - ந.பிச்சமூர்த்தி)

கருத்துரையிடுக

புதியது பழையவை