அண்மை

பண்பாட்டு மொழிபெயர்ப்புத் தேவையும் சிக்கலும் – தீசன்

பண்பாட்டு மொழிபெயர்ப்புத் தேவையும் சிக்கலும் – தீசன்

மொழி வெளிப்பாடு புறநிலைக்கும் அகநிலைக்குமான உறவாகவும் கற்பிதமாகவும்  புறத்தை அகத்தின் வழி பிரதிபலிப்பதாகவும் போலச் செய்தலாகவும் நிகழ்கிறது. இதனால் மொழி வெளிப்படும் அனைத்திலும் பண்பாடும் கற்பிதமும் ஊடாடுகிறது. இதனால் ‘நான்’ எனும் சுயத்தைக் கட்டமைக்கும் பணியில் மொழியின் பங்கே அதிகமாகும். “ஒரு குழந்தை பிறக்கும் போதே, அதைச் சுற்றி சமூக, கலாசார, மொழி போன்ற வலைப்பின்னல்கள் ஏற்கெனவே தயாராக இருக்கின்றன. எனவே, பிறப்பு என்ற விஷயம் நிகழ்வதற்கு முன்பாகவே மொழி இருக்கிறது” எனும் லாக் ழக்கான் கூற்று எல்லா உடல்களும் மொழியுடலே என்பதை நிறுவுகிறது. அதன்வழி, மொழிபெயர்ப்பு என்பது மூலமொழிச் சமூகத்தாரால் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் மொழிக்கிடங்கை  இலக்கு மொழிச் சமூகத்தாருக்கு விளங்க வைப்பது எனலாம்.  இதனால் ஒத்திசைவுள்ள அல்லது ஒத்திசைவில்லாபண்பாடுகளுக்கு இடையே உள்ள மொழி வேறுபாட்டிற்கும் காலத்தால் பரிணமித்த ஒருமொழிப் பண்பாட்டின் வேறுபாட்டிற்கும் பிணைப்புப் பாலமாய் பண்பாட்டு மொழிபெயர்ப்புள்ளது. 

‘மொழியில் பண்பாட்டு ஒழுங்கின் ஒரு பகுதியாகவே சொல்லுக்கான பொருள் அமைந்திருக்கிறது’ என்கிறார் நைடா. மொழி நன்கு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுகளோடும் பயன்பாட்டு நெகிழ்வோடும் இயங்கி, பண்பாட்டுக் கூறுகளோடு ஒழுங்கமைவுடனும் அற்றும் அருவமாய் நிலைத்திருக்கிறது. அதனால் மொழிபெயர்ப்பு, சொல்லுக்கான பொருளோடு பண்பாட்டையும் கடத்துவதன் வழிதான் பெயர்ப்பு வெற்றியை அடையகிறது. மூலப்பனுவல் உணர்த்தும் பண்பாட்டுக் கூறுகளை இலக்குப்பனுவல் தன்மொழி பண்பாட்டின் வழி உணர்த்தும் போதுதான் பெயர்ப்பானது உணர்வுத்தளத்தில் இயங்க வல்லதாய் அமையும். காரணம், ‘இலக்கு மொழியாளரின் சிந்தனை இலக்குமொழிப் பண்பாட்டைச் சுற்றி நிற்குமே தவிர மூலநூல் பண்பாட்டிற்குச் செல்லாது’.

பண்பாட்டுக் கூறுகளுக்கிடையே ஒத்திசைவில்லா இரு மொழிகளால் முழுமையான மொழிபெயர்ப்பை நிகழ்த்திவிட முடியாது. அதேபோல் ஒரே பண்பாடுடைய இரண்டு மொழிகள் உலகில் இல்லை.  ‘எந்த ஒரு மொழிபெயர்ப்பும் நீண்ட பண்பாட்டு இடைவெளியைக் கொண்ட இருமொழிகளுக்குப் பாலமாவதில்லை (நைடா)’ மூலமொழியிலுள்ள உருபன், சொல், தொடர், வாக்கியம் போன்றவற்றிற்கு எவ்வாறு இலக்கு மொழியில் இணைவு கிடைப்பது அரிதோ அதேபோல் மூலத்தின் எல்லா பண்பாட்டு வடிவங்களையும் இலக்கு மொழிப் பண்பாட்டால் நிரப்பிவிட முடியாது.

“ஒரு மொழியில் சொல்லப்படும் எல்லாச் செய்தியையும் அவை செய்தியின் முக்கிய கூறாக இருக்குமானால் அதனை அடுத்த மொழியிலும் வெளியிட முடியும் (நைடா)” எனவே மொழிபெயர்ப்புத் தீர்க்கமுடியாத சிக்கலன்று என்பது நைடாவின் கருத்து. மூலமொழிக்கும் இலக்கு மொழிக்கும் இயன்ற வகையில் பாலத்தை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பு, பெறுமொழி பண்பாட்டால் அப்பாலத்தை மூலமொழிக்கு விரோதமின்றி அமைக்கும் போதுதான் மூலமொழியுணர்வைக் காட்சிப்படுத்த முடிகிறது.

மொழியை தெரிதாவின் கட்டுடைத்தல் கோட்பாடு அடிப்படையில்  காணும்போது எல்லாச் சொல்லும் இருவேறு பொருளைக் கொண்டிருக்கின்றன. அவை, 1)மையப்பொருள், 2)விளிம்புநிலை பொருள். ஒன்றை விளங்கி கொள்ளல் என்பது பொருளை மையத்தில் நிறுத்துதல் அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட மையப்பொருளை விளங்கி கொள்ளல் எனும் காரணத்தால் சாத்தியப்படுகின்றது.  இதில், பெரும்பான்மை பொருள்கோள் முறைஒருமையின் உற்பத்தி பொருளே மையப்பொருள். மையத்திற்கு வெளியே உள்ள அனைத்துப் பொருளும் விளிம்புநிலை பொருள். கால, சமூக வளர்ச்சி மொழியின் மையப்பொருளுக்கும் விளிம்புநிலை பொருளுக்குமான ஊசலாட்டத்தைக் குறிப்பான் குறிப்பீட்டுப் பெயர்வின்வழி புலப்படுத்துகிறது. இதனால், குறிப்பான் - குறிப்பீட்டு உறவு சமூகத்தாலும் நிலையற்ற தன்மையிலே கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பொருட்களுக்கு, நிகழ்வுகளுக்கு  சமூகம் அளித்துள்ள அர்த்தமதிப்பு அம்மொழிக் குறிப்பான்களிலும் எதிரொலிக்கின்றன. குறிப்பான்களின் அர்த்தமதிப்புச் சமூகத்தில் தொடர்ச்சியாகப் பயில்விக்கப்படுவதன் வழி நிலைபேறாக்கம் அடைய விரும்பினாலும் மொழியின் ‘பொருட்பெயர்வு’ இயல்பு அதற்கு எதிராக அமைகிறது.  இதனால் உலகின் எந்த மொழியிலும் குறிப்பான்கள் மேல் ஏற்றிவைக்கப்படும் அர்த்தமதிப்பு - நகலாக்கமதிப்பு அல்லது கற்பிதம் நிலையானது அல்ல என்றாகிறது. மொழியூடகம் தொடர்ச்சியாகக் குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்குமான உறவை வலுப்படுத்துவதன் வழியே,  மூலமொழிக் குறிப்பான் உணர்த்தும் மதிப்பை அதற்கு நிகரான இலக்குமொழிக் குறிப்பானில் தேடும் நேருக்கு நேரான மொழிபெயர்ப்பு (Literal Translation) உருவாகிறது. அவ்வாறு தரப்படும் நிகர்மை, மூலத்தின் சமூகப் பண்பாட்டு மதிப்பை இலக்குமொழிக்குக் கடத்தாதபோது அம்மொழிபெயர்ப்புக் குறைபாடுடையதாய் தோன்றுகிறது.

சமூகத்தில் அல்லது மொழியில் பண்பாடு என்பது கட்டமைக்கப்பட்டது/ கற்பிக்கப்பட்டது/ கடத்தப்பட்டது. இதனால் ‘குறிப்பின் தோன்றலாகப்’¹ பயிலப்பட்டிருக்கும் இடக்கரடக்கல், குழூஉக்குறி, அவையல் கிளவி, இறைச்சி, உள்ளுறை முதலான மொழிவடிவங்கள் அதன் நேரடி இலக்கண பொருட்கூறோடு பெயர்கையில் இதுவரை கற்பிக்கப்பட்ட பொருளுக்கு முற்றிலும்  முரணாக அமையும்.  மூலத்தின் பொருட்கூறுகளை அதன் இலக்கணக்கூறுகளோடு சேர்த்துப் பெயர்க்கும் ‘முறைசார் நிகரன்’ முறையினால் எல்லாச் சமயங்களிலும் இருமொழிப் பண்பாட்டுக் கூறுகளைப் பொருத்திவிட முடிவதில்லை. காரணம், பொருட்கூறுகள் அதனிலக்கணக்கூறுகளோடு பண்பாட்டு ஒத்திசைவில்லா இலக்குமொழிக்குப் பெயரும் போது அங்கு சொல்லுக்கு முதன்மை அளிக்கப்படுகிறதேயன்றி அது உணர்த்தும் சூழல்பொருள், சமூகப் பண்பாட்டு மதிப்புப் பெயர்க்கப்படுவதில்லை.

தீசன்

குறிப்பு - இக்கட்டுரை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆய்வுவெளிக்குச் சொந்தமானது. அதனால் என் அனுமதியின்றி இக்கட்டுரையை அல்லது அதன் பகுதிகளை வேறெங்கும் எவ்வடிவிலும் பயன்படுத்த வேண்டாம். 

கருத்துரையிடுக

புதியது பழையவை