அண்மை

இசை ஒலி மொழி - தீசன்

இசை ஒலி மொழி - தீசன்

ஓர் ஒலி குழூஉக்குறியானால் மொழியாகக் கருதப்படுகிறது. ஈ என்றது ஓர் ஒலி. ஈ என்றது தமிழ்நிலத்துள் பொருளைத் தரும் ஓர் சொல். அதாவது குழூஉக்குறி. இப்போது அது ஓர் மொழிமட்டுமன்று. அது ஓர் இசை. 


இசை என்பது பொருளை உண்டாக்கும் ஒலிகளின் இணைவு. ஒலி என்பது பொருளின் ஒருபகுதி. இசையின் இயல்பு ஊசலாட்டம். அது பல்பொருள் சாத்தியத்தையும் உண்டாக்கலாம் பொருளற்ற ஒலியாகவும் இயக்கமாகலாம். இதனால் இசை என்பது தனிமனித கருத்தக்கமாகத் தோன்றுகிறது. ஆனால் இசை தனிமனிதரால் உண்டாக்கப்படுவதன்று. இசை ஒரு சமூக உற்பத்தி. எது இசையாக்கப்படவேண்டும் எனும் தனிமனித எண்ணமாக வெளிப்படுவது, இந்த சமூக உற்பத்தியின் எதிரொலி. 


தனிநபருக்கு முன்பே ஏற்றப்பட்ட ஒலிகளின் பல்வேறு வகைப்பட்ட இணைவுகளின் சாத்தியக்கூறுகளே இசையாக்கமாக வெளிப்படுகிறதோ? (கேரம் விளையாட்டின் சாத்தியப்பாடுகளைப் போல)


ஒன்றை இசையாகக் கொள்வது கொள்ளாதது சமூக இயக்கம். இருந்தும், ஒவ்வொரு தனிநபருக்கும் ஒலி என்ற கருத்தாக்கம் உண்டு என்பது மட்டும் உண்மையாக இருக்கலாம். 


அனைத்தும் இசையாகத் தெரியும் போது ஒலியைப் பிரித்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒலியைப் பிரித்துக்காட்டும் போதுதான் ‘தனிநபர்’ எனும் புதுபொருள் உற்பத்தியாகிறது. இப்பொருள் முன்பே உருவமாய் நின்ற ஓர் பொருளை (சமூகம்) அருவமாக்கி பின்னுக்குத் தள்ளுகிறது. இதனால் எவை (எனக்கு) இசை எனும் புது வடிவம் உருவாகிறது?


சிந்தித்துப் பார்த்தால் ஒலி என்ற ஒரு பொருள் பொருளற்ற ஒன்றாகத் தெரிவதற்குக் காரணம் இசைதான். இசையைப் பொருளுடையதாய் தோன்ற செய்வது ஏற்றப்பட்ட ஒலிகளின் இணைவு. 


ஒலி உருவாக்கத்திற்கு இசை அடிப்படையாவது போன்று தனிநபர் உருவாக்கத்திற்கு ஒலி அடிப்படையாகின்றது. மொழி எவ்வாறு நானை உண்மை ஆக்குகிறதோ. அதே போல் பொருள்கொள்ளும் தனிநபரைப் பொருளற்ற ஒலி தான் உருவாக்குகிறது.


/ஒலி எவ்வாறு பொருளற்றவைகளாகச் சுட்டப்படுகின்றன?/


இசை எவ்வாறு ஒலியாகும் பண்பைப் பெறுமோ அதேபோல் ஒலியும் இசையாகும் பண்பைப் பெறும். எல்லா ஒலியும் எப்போதுமே ஒலியாக இருப்பதில்லை. அதைப் பல்வேறு சமூக காரணிகள் இசையாக மாற்றுகின்றன. மாற்றுகின்றன என்பதன் மூலம் அவை முன்பே சமூகத்தால் ஒலியாக (பொருள்தராத வடிவமாக) கொள்ளப்பட்டிருப்தை உணர்க. 


அறிவின்சார்பிலிருந்து இப்போது (என்னால்) ஒலி எனும் பொருள் நிலையாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒலி எனும் பொருள் இல்லை என்றே சொல்லிவிடலாம். எங்கும் இசையாகத் தெரிகிறது. இசைமயம். அதனால் பொருளற்றவையாகச் சுட்டுப்படும் ஒலி எனும் பொருள் இல்லவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது (மாட்டேன்). காரணம், உண்மை என்ற ஒன்று இல்லை. உண்மைகள் தானே.


தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை