அண்மை

சிலநாள் யோக்கியன்கள் - சம்பாபதி

சிலநாள் யோக்கியன்கள்
ஓவியம் - அஃனாலி

எப்போதும் கிடைக்கும் வாழைப்பழத்தைப் பார்த்து பேரிக்காய் ஏளனமாய் சிரித்ததாம்...

எப்போதும் சொர்க்க வாசல் திறந்தே கிடந்தால் யார் கண்டுக்கொள்வார்கள். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட மாதம் என்று காலம் குறித்தால் தானே கல்லா கட்டும்!! எப்போதும் திறந்தே கிடக்கும் துணிக்கடைகளில் தீபாவளி காலத்தில் மட்டும் நிற்க இடமில்லாமல் கூட்டம் அலை மோதுவது வணிக நோக்கம் எனில்...இதுவும் அதுதான்!?

Seasonal fruits, seasonal vegetables, flowers போல, சீசனல் சாமி ஐயப்பன். மற்ற மாதங்களிலெல்லாம் கேட்பார் அற்று கிடக்கும் அவர்மீது கார்த்திகை மார்கழி மாதம் பொத்துக்கொண்டு பாசம் வந்துவிடுகிறது இந்த சில நாள் யோக்கியன்களுக்கு.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குடித்துக்கொண்டு, தகாத வார்த்தைகளைப் பேசிக்கொண்டு, மனைவியின் அனுமதியைக் கேட்காமலேயே கணவன் என்ற உரிமையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கிக்கொண்டு, பெண்களை நுகர்வு உடலாகப் பார்த்து நண்பர்களோடு கேலிக்கிண்டல் செய்து ரசித்துக்கொண்டு, கூவுவது, கத்துவது, நடப்பது, ஓடுவது, தாவுவது, நீந்துவது...+ என எல்லா உயிர்களையும் ரசித்து தின்றவர்கள் அப்படியே இதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு மாலையை மாட்டியவுடன் யோக்கியன்களாகிவிடுகிறார்கள்... இவர்களை அய்ய்ய்யா சாமி என்று கும்பிட்டு வேறு தொலைய வேண்டும், காலில் விழ வேண்டும், சாமி என்று அழைக்க வேண்டும்...

பொம்பள வாடையே ஆகாதாமே அந்த சீசனல் சாமிக்கு... ஆண்கள் மாலைப் போட்டு மினிக்கிக் கொண்டு திரிவதற்கு, எப்போதும் வீட்டு வேலை செய்து துன்பத்தில் வாடும் பெண்களுக்குச் சிலநாள் யோக்கியன்களால் இன்னும் கூடுதல் வேலை வேறு..

வீட்டில் இருக்கிற எல்லாத்தையும் புரட்டிப்போட்டு சுத்தம் செய்ய வேண்டும். சிலநாள் யோக்கியன்கள் எழுந்து குளித்துவிட்டு சாமி கும்பிடுவதற்கு அவர்களைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்து குளித்து வாசல்கூட்டி அவ்வளவு கொசுக்கடியிலும் கோலமிட வேண்டும்.

மற்ற நாட்களில் மாதவிலக்கு காலங்களில்தான் பெண் உடலைத் தீட்டு என்கிறார்கள், ஆனால் மாலைப் போட்டு இருக்கிறவர்களுக்குப் பெண் உடல் என்றாலே தீட்டு தான். தெரியாமல் கூட தொட்டு விடக்கூடாது. சீசனல் சாமி குத்தமாகிவிடுமே..! தூதிற் பிரிவு, காவல் பிரிவு போல மலையேறும் பிரிவில் "பாறை வழுக்கி அசம்பாவிதம் ஆகிவிடுமோ, போகிற வழியில் யானை மிதித்துவிடுமோ என் தாலிக்குப் பாதிப்பு வந்துவிடுமோ!" என பெண்களும் தன் உடலைத் தீட்டாகவே நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

மற்ற சாமிகளுக்கு மாலைப் போடுவதை விட இந்தக் கார்த்திகை சீசன் சாமிக்கு மாலைப் போடும் சிலநாள் யோக்கியன்களின் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு காரணம்" அவருக்கு பொம்பள வாடையே ஆகாது" என்பது தான் போல. அப்போது தானே ஒதுக்கி ஒதுக்கி வைத்து தீட்டு உடல் என்று ஆழமாகப் பதிய வைக்க முடியும். நான் தீட்டு இல்லை ஆண் உடல் புனிதமானது நான் புனிதமானவன் என்று நிறுவ முடியும். "என்னா தான் இருந்தாலும் நீ பொம்பள தான" என்று கர்ஜித்து கொள்ள முடியும்.

இந்த சிலநாள் யோக்கியன்கள் அந்த சீசனல் சாமியைப் பார்க்கப்போவதற்கு வீட்டில் இருக்கிறவர்கள் வாயைக் கட்ட வேண்டும். அவர்கள் தின்னும் அதே உணவைத் தான் எல்லாரும் தின்று தொலைய வேண்டும்.

மலையேறப் போகும்போது எந்த தகவல் தொடர்பு சேவையும் இருக்காது.. போனவன் உசுரோட இருக்கானா செத்துட்டானா என்றுக்கூட தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தாலியைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து இருக்க வேண்டும்..

ஒருவேளை கடைசியாகச் சாமியே சரணம் ஐய்யப்பா என்று கத்தும்போது நெஞ்சு வெடித்து செத்துவிட்டால் அப்போதும் மனைவியின் ஒழுக்கம் தான் பேசுபொருளாகும். அவனவன் திமிரெடுத்து போனதற்குப் பெண்கள் தான் பழி சுமக்க வேண்டியிருக்கிறது‌..

பள்ளிக் குழந்தைகளிடம் 'ஏ! மத்த புள்ளைங்கள்ட்ட வாங்கி சாப்டாத! மத்தவங்க தண்ணீ குடிக்காத, சாமி கண்ண நோண்டிடும்!! என்றெல்லாம் எச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது பின்பக்கமாக வந்து குளித்துவிட்டு தான் வரவேண்டும்... யாரையும் தொடாத சுத்தமா இருக்காதுவோ பாத்து தள்ளியே இரு! என்று சொல்லியனுப்புவார்கள்.

யாரையும் தொடாமல் அவர்கள் செய்யும் அலப்பறைகள் இருக்கே!! அய்யோ...

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சக மாணவியும் அவளது தந்தையாரும் மாலைப் போட்டிருந்தனர் "நான் தொடல நீயே முதல்ல எடுத்துக்கோ! உனக்கு தான் எங்க அம்மா செய்ற தக்காளி சாதம் புடிக்கும்ல்ல!'"என்று நான் சொல்ல, 'எனக்கு புடிக்கும் தான் ஆனா இப்போ இது "தீட்டு சாப்பாடு", மலைக்குப் போய்ட்டு வந்து சாப்பிடுறேன்' என்று சொல்லி மறுத்துவிட்டாள். உணவை தீட்டு என்றவுடன் கடுமையான கோபம் வந்துவிட்டது என்றாலும் நான் எதுவும் சொல்லவில்லை. மலைக்குச் சென்று வந்த பிறகு வகுப்பில் எல்லோருக்கும் பஞ்சாமிருதம் கொடுத்தாள். பய பக்தியோடு வாங்கி எல்லோரும் நக்கிக்கொண்டிருந்தனர். என்னிடம் கொடுக்க வந்தாள். நான் நெருங்கிய தோழி என்பதால் சிவப்பு கறுப்பு கயிறு, நேந்திரம் பழ சிப்ஸ் என பல பொருட்கள் கொண்டு வந்தாள்.. "அவ்ளோ தீட்டு பாக்குற சாமியோட பிரசாதம்லாம் எனக்கு வேணாம், எடுத்துட்டு ஓடு" என்று சொன்னேன். "ஏ சாமி பிரசாதம் வேணாம்னு சொல்லக்கூடாது, உடம்பு சரியில்லாம போயிடும் என்றாள்".. "செத்தாலும் பரவாயில்லை. எனக்கு வேணாம்" என்று மறுத்துவிட்டேன். அன்றிலிருந்து பஞ்சாமிர்தம் என்றாலே குமட்டிக்கொண்டு தான் வரும். கடையில் வாங்கிய நேந்திரம் பழ சிப்ஸ் என்றாலும் அது சிலநாள் யோக்கியர்களைத் தான் ஞாபகப்படுத்துகிறது.

வகுப்பில் இருக்கும் சற்று நேர தீண்டாமையையே என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லையே...சில நாள் யோக்கியன்கள் வீட்டில் பெண்கள் எவ்வளவு துன்பம் படுவார்கள் என்று புரிந்துக் கொள்ள முடிகிறது.

பொம்பள வாடையே ஆகாத அந்த சீசனல் சாமிக்கு மாலைப் போடும் சிலநாள் யோக்கியன்களிடம் சில கேள்விகளும் அட்வைஸ்களும்...

திருமணமான சிலநாள் யோக்கியன்களே!! உங்களுக்கு ஒரு மண் அளவுக்குக்கூட வெட்கமோ சூடோ எதுவும் இருக்காதா!? நீங்கள் சாமியாராக இருந்த காலத்தில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று இருந்த அதே உடல் தானே பிறகும் இருக்கிறது...

சில நாள் யோக்கியன் வேடத்தை களைத்தவுடன் அந்த உடலைப் புணருகிறீர்களே! உமிழ்நீரை அதாவது எச்சிலை அமிர்தம் என பொய் சொல்லி சுவைக்கிறீர்களே!? உங்களை நினைத்தால் உங்களுக்கே அருவருப்பாக இருக்காதா!?!? அப்போது ஐயப்பன் கோபித்துக் கொள்ள மாட்டாரா!? துரோகம் செய்கிறாய் பக்தா!! என்று உங்கள் குடலை உருவிக்கொள்ள மாட்டாரா!? ஆச்சரியமாக இருக்கிறது சிலநாள் யோக்கியன்களே! எப்படி கொஞ்சம்கூட சுடுதல் இல்லாமல் மாறிக்கொள்கிறீர்கள் என்று!!

பெண்களின் சதையைத் தின்னாமல் அவர்களுக்குச் சில நாட்களாவது ஓய்வு கொடுக்கிறீர்கள் அந்த வகையில் மகிழ்ச்சி. அதைப்போலவே வீட்டு வேலைகளையும் செய்யவிடாமல் ஓய்வு அளித்தால் நன்றாக இருக்குமல்லவா!?

பெண்களுக்கு அனுமதியில்லை, (சட்டம் அனுமதியளித்தாலும் ஆணாதிக்கவாதிகள் பெண்கள் மலைக்கு வருவதை அனுமதியளிப்பதில்லை). அந்த சீசனல் சாமிக்குப் பெண்கள் என்றாலே ஆகாது சரி.. மாலைப்போட்டு மலை ஏறி அந்தச் சிலையைப் பார்க்கப்போவது நீங்கள் தானே! ஏன் நீங்களே மாலைப் போடுவதற்கு முன்பு வீட்டை ஒட்டடை அடித்து, வீட்டை அலசி விட்டு, பாத்திரம் கழுவி காய வைத்து, பெண்களின் துணிமணி, போர்வை உட்பட எல்லா துணிகளையும் ஏன் நீங்கள் துவைக்க கூடாது. தீட்டு உடல் துவைத்தால் மீண்டும் தீட்டு தானே ஆகும்!?

பெண்கள் சமைக்கும் உணவும் தீட்டு தானே! அவர்கள் வடித்துக்கொட்டிய சோற்றைத் தொடும் போது கூசாதா உங்களுக்கு!?! அந்த உணவை ஏன் பொம்பள வாடையே ஆகாத ஆளுக்கு படைக்க வேண்டும்... கோபித்துக் கொள்ள மாட்டாரா அவர்!? நீங்கள் தானே புனித உடல்! நீங்களே வீட்டில் இருக்கும் அனைவருக்கும், அந்த ஆளுக்கும் சேர்த்து பொங்கிப்போட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்.. ஏன் நீங்களே சமைக்கக்கூடாது மூன்று வேளையும்.!?

அந்த விரதம் இந்த விரதம் என எந்த விரதம் எடுத்தாலும், தான் சாப்பிடாவிட்டாலும் உங்களுக்கு வகை வகையாக மீன், ஆடு, கோழி என ருசியாக ஆக்கிப்போடும் தாய்க்கோ மனைவிக்கோ மாலைப் போட்டு மினிக்கிக் கொண்டிருக்கிற காலத்தில் நீங்கள் ஏன் ஆக்கிப் போடக்கூடாது...!?

மாலைப் போட்டிருப்பது நீங்கள் மட்டும் தானே... ஆகா அருமையாக வாசம் மூக்கைத் துளைக்கும் குழம்பு கொதிக்கும் போது' என்னைக் கொஞ்சம் சாப்பிட்டு பாரேன், சுவையாக இருப்பேன்' என்று மீன்கள் துள்ளும்... அப்படி இருந்தும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொண்டு அந்த சீசனல் சாமிக்குக் கடும் விரதம் எடுங்களேன்... உங்களை அவருக்கு இன்னும் பிடித்துப்போகுமல்லவா!?

நீங்கள் சிலநாள் யோக்கியன்கள் வேடத்தை களைத்த அன்றே உங்கள் மனைவி, "ஆண் என்று நினைத்தாலே வாந்தி எடுக்கும் ஒரு பெண் தெய்வம் என் கனவில் வந்து மாலைப் போட்டு விரதம் இருக்க சொன்னது அடுத்த மூன்று மாதங்களுக்கு" என்றால்.. உங்கள் காம வெறியைக் கட்டுப்படுத்திக்கொண்டு.. உங்கள் மனைவிமார் எழுவதற்கு முன் எழுந்து குளித்து... சமைத்து... விடாமல் ஊழியம் செய்வீர்களா!?!?

கோவிலுக்குச் சென்று வருவதற்கு ஆறு நாட்களோ ஏழு நாட்களோ ஆனால், அத்தனை நாட்களும் வீட்டை கவனித்துக் கொள்வீர்களா!?

ஒன்று முழுதுமாக யோக்கியனாக இருக்க வேண்டும்... இல்லையென்றால் எப்போதும் அயோக்கியன்களாகவே இருந்துவிட வேண்டும்.

சிலநாள் யோக்கியன்கள் கதை எதற்கு!?!?

அந்த சீசனல் சாமிக்கு வேண்டிக்கொண்டால் வீட்டு வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும் பெண்களின் உதவியை நாடவேக்கூடாது மீறினால் சாமிக் குத்தமாகிவிடும் என்ற கட்டுப்பாடு மட்டும் இருந்திருந்தால் ஐய்ய்ய்ய்யப்ப்ப்பனாவது ஒன்னாவது என்று ஓடிவிடுவான்கள். அவரை அழித்து ஒழித்திருப்பார்கள்..

ஐயப்பன் என்று ஒருவர் இருந்தாரோ இல்லையோ தெரியாது.. இருந்திருந்தாலும் கேட்பாரின்றி தனியாகக் கிடந்திருப்பார்.

அந்த சிலநாள் யோக்கியன்கள் மீது உள்ள கோபத்தை விட பெண்கள் மீது தான் அதிகளவு கோவம் வருகிறது.

"நீ சாப்டலன்னா எனக்கு என்னா!? நானா மலைக்கு போறேன்!! நானும் சாப்டுவேன் புள்ளைங்களும் சாப்டும்" என்று அவர்கள் பாட்டுக்குச் சாப்பிட வேண்டியது தானே!?!

"பெண்ணை இழிவாக கருதும் ஒருத்தனுக்கு வேண்டிக்கொள்வதற்கு நானே எப்படி ஊழியம் செய்வேன்" என்று ஏன் கேட்காமல் இருக்கிறார்கள்!?.

"அப்ப தொடாம ஒதுங்கி ஒதுங்கி தான இருந்த இப்ப மட்டும் ஏன் இந்த பக்கம் வர்ற" என்று உதைத்து விரட்டியடிக்க வேண்டும்.

ஏன்டா உன்ன பெத்தவளையும் உன்கூட வாழுறவளையும் கூட பொறந்தவளையும் உனக்கு பொறந்தவளையும் தீட்டுன்னு சொல்றவனுக்கு நீ வேண்டிக்கிட்டு வேற போறியா.. போனா அப்படியே போய்டு திரும்பி வராத! என்று ஏன் யாரும் சொல்வதில்லை...?!

உங்கள் எல்லோரது சார்பாகத்தானே என்னை நான் வருத்திக் கொள்கிறேன் என்றும் மழைக்காலம் குளிர்காலம் இறைச்சி செமிக்காது.. என்றெல்லாம் கதையை அள்ளி வீசுவார்கள் எடுத்துக்கொண்டு ஓட சொல்லுங்கள் அந்தக் கதைகளை.

அரைகுறை முற்போக்குவாதிகளும் இதில் சேர்த்தி..

அது நம்ம சாமி இப்போ தான் இப்படி ஆகிட்டாங்க, ..என்று பொய்யாகப் புலம்பிக்கொள்வார்கள் உள்ளுக்குள் ஆணாதிக்க வெறி இனிக்கத்தான் செய்யும். நம்ம சாமிய நம்மக்கிட்டேர்ந்து புடுங்கிட்டாங்கன்னா எல்லாரையும் கூட்டிட்டு போய் புரட்சி பண்ணுனும் (ஆலய நுழைவுப் போராட்டம் ஒருபோதும் விடுதலையை தராது. அது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் ஒன்றுதான்)

...இல்லன்னா யாருமே போகாம இருந்தா இந்த விதியெல்லாம் பணத்துக்காகத் தானாவே உடைந்து சுக்கு நூறாகிவிடும்.

"யாரும் வராத கடையை யாரும் பாதுகாக்க மாட்டார்கள்" என்ற புரிதல் எப்போது வருமோ!!

கருத்துரையிடுக

புதியது பழையவை