காதல் இலக்கணக்குறிப்பு என்னவாக இருக்கும்?
அது பெயர்ச்சொல் தான். காதலை காதலோடு காதலுக்கு வேற்றுமையேற்கும் எல்லா சொல்லும் பெயர்ச்சொல்லே.
காதல், பெயர்ச்சொல்லிலும் பண்புப்பெயரோ?
பண்புப்பெயர் பொருட்களின் நிறம், வடிவம், சுவை, அளவு, பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும்.
பண்புப்பெயரென்று சொல்வதில் தவறிருக்காது. காரணம் அதில் அன்பெனும் பண்புள்ளதல்லவா?
அவ்வாறெனில் அன்பு ஒருவர் நிகழ்வா? ஒத்தார் இருவர் நிகழ்வல்லவா? எனின் காதல் தொழிற்பெயரோ?
இருக்கலாம்.
அதிலும் தவறில்லை.
காதல் தொழிலே. காதல் போயின் சாதல் என்றார். சாதல் தொழில் எனின் காதலும் தொழில் தான்.
இது ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ எனும் அளவை.
மேற்கோள் அளவை
இல்லை. எடுத்துக்காட்டு உவமை அணி.
நூலளவையில் அனுமான அளவை என்று கூறும்.
இவ்வாறான கலப்பு அளவைகளை ஏற்பதற்கில்லை. ஏன் காதல் இடப்பெயராய் இருத்தல் கூடாது? அது ஒத்தார் இருவர் மனத்தே தோன்றுவது தானே. எனின் காதலென்பது இடப்பெயர் தான்.
மனத்தை இடமாய் கொள்ளவியலுமா?
இலக்கண தருக்கம் அதை அனுமதிக்கிறது. மனமொருவகையில் நிலமே.
அவ்வாறெனில் தருக்கப்படியே காதல் என்பது காலப்பெயராகும். அது ஒத்தார் இருவர் அகத்தே நிகழ்வதாயின் அவரகம் ஒக்குஞ்சமயத்தில் தானே கூடுவது காதல். எனில் காதலென்பது காலப்பெயர்.
அது என்ன ஒத்தார் இருவர் ஒக்குஞ்சமயம்? எனில் ஒருதலைக்காதலை என்னென்பீர்? அதும் காதல் தானே?
ஆம் அதும் காதல் தான்.
ஒருதலையே ஆயினும் அதற்கும் நோக்குங்காலமும், ஊற்றெடுக்கும் அன்பும், அறிவும் புலனும் ஆக்கும் நிகழ்வும், இவை நிகழும் இடமாகிய மனமும் மறுக்கமுடியாத வகையிலிருக்கின்றனவே.
இருந்தாலும் காதலையும் ஒருதலைக்காதலையும் ஒன்றாகப் பார்ப்பதுப் பொருந்ததாது.
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே.
ஆம்.
ஒருதலையிலிருந்து தான் காதல் முளைவிடுகின்றது. ஒத்தார் இருவரே ஆயினும் ஒப்புதற்கு முன் ஒருதலையினரே. எனவே ஒருதலையின் வளர்ச்சி தான் காதல்.
ஒருதலையாய் நோக்கித் துவங்கல் முதலாயின் அதனின் துளிர்க்கும் காதல் சினையாகும். எனவே காதலென்பது சினைப்பெயர்.
பெயர் மொத்தம் ஆறு என்பர் அதன் மொத்தவற்றிலும் காதல் அடங்குமாறு அமைகிறதே!
இல்லை அமைவிக்கப்பட்டது.
எவ்வாறு?
வினையைப் பெயருள் அடங்குமாறு அமைப்பது மரபு. அவ்வாறமைத்து ஏன் மயங்குகிறீர்?
காதலிக்கிறேன் காதலித்தேன் காதலிப்பேன் காலங்காட்டும் இடைநிலைகள் தோற்றங்கொள்ளும் எல்லா சொல்லும் வினைச்சொல்லே! எனில் காதல் என்பது வினையடி.
சாதலிக்கிறேன் சாதலித்தேன் என்றெல்லாம் சொற்களைப் படித்ததாய் கேட்டதாய் எண்ணமுண்டோ உங்களுக்கு?
சாதல் தொழிற்பெயரெனின் காதலும் தொழிற்பெயரென்று நீர் தானே சொன்னீர்.
எனில் காதல் பெயர்ச்சொல்லன்று.
பெயரே அல்லாதது தொழிற்பெயராயும் இருக்கவியலா.
காதல் வினை தான். அதனால் தான் காலங்காட்டும் இடைநிலைகள் தோன்றுகின்றன. சாதலில் அவை தோன்றா. காரணம் சாதல் பெயர். காதல் வினை.
அறிவில் ஆதவரே. ‘சா’ அதில் வினையடி. அதனால் தான் சாவேன், சாகின்றேன் எனப் பயில்கின்றன. ‘சாதல்’ தொழிற்பெயர் தான்.
ஓஒஒ! எனில் தருக்கப்படி தொழிற்பெயர் வினையடியைக் கொண்டிருக்கும்.. அல்லவா?
ஆம்
நீர் சொல்வதுபோல் காதல் தொழிற்பெயராயின் காதலில் வினையடி எது? ‘கா’ வா?
‘...........’
இது போதாதா? ‘காதல்’ வினையென்றுரைக்க..
எனில் இத்தனை நேரம் நாங்கள் பேசியதென்ன பிள்ளையாட்டா?
ஆம். அதிலென்ன ஐயம். ‘சாதலைத்’ தொழிற்பெயரென நிறுவ, ‘சாவேன், சாகின்றேன்’ என்று கூறத்தெரிந்தவருக்குச் ‘செத்தேன்’ என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே? ஏனதைச் சொல்லவில்லை.
இலக்கணமே ஒரு மொழிதலாக இருக்கிறது அதனால்தான்.
இல்லை. மொழியே ஒரு மொழிதலாகத் தான் உள்ளது.
‘காதலிக்கிறேன்’ எவ்வாறு உண்மையோ அதேபோல ‘காதலை’யும் உண்மை தான்.
இரண்டு உண்மை என்பதில் நியாயமில்லை.
உண்மைகள் நியாயமாய் இருக்கலாமா?
இப்போது எது முதல் உண்மை என்பதில் தான் தருக்கமும் நியாயமும்
காதல் பெயராய் முதலா? வினையாய் முதலா? என்பதில் தான் விசேச விசயம்.
வினை தான் முதல்.
நிச்சயம் இல்லை பெயர்தான் முதல்.
ஒருவேளை வினை முதலாய் இருப்பின் வினையல்லவா நமக்கு முதலில் தோன்றியிருக்க வேண்டும். நமக்கு முதலில் எழுந்த காட்டுக்கள் எல்லாம் பெயர் தானே.
முன்னே தெரிவதெல்லாம் மெய்மையாகி விடாது. என் கண்ணுக்கு மண்டை தான் தெரிகிறது அதனால் மூளை இல்லை என்பீர் போலும்.
கண்ணுக்குத்தெரிவது தான் என்னைக் கேட்டால் உண்மை என்பேன். கண்ணுக்குத் தெரியாத நுண்மைகள் கண்ணுக்குத் தெரிகின்ற பருமைகளால் பிறப்பவை என்பது என் தீராத நம்பிக்கை.
ஓ! எனில் உன் அரும்பெரும் மூளை நுண்மையா?
என் மூளை உண்மை.
நிறுவுக.
அதற்குச் சில தொழில்நுட்பக் கருவிகள் தேவைப்படலாம்.
நான் அறிவியலை நம்புவதில்லை.
அவை அறிவியல் என்று சொல்லப்பட்டவை. அறிவியல் அன்று. அதனால் அவற்றை நம்பலாம்.
எனக்கிதில் சம்மதம் இல்லை.
சரி சரி.. காதலென்னாயிற்று?
காதல் பெயராவும் வினையாவும் உளதால் முடிவெடுப்பதில் தடையேற்படுகிறது.
இல்லை. வினையாய் உளது. பின்னைப் பெயராய் உளது. அப்படிச் சொல்க.
இல்லை.
ஆம்.
இல்லையில்லை.
ஆமாமாமாம்
இரட்டையடுக்காகினும் ஒப்புதற்கில்லை.
எல்லாவற்றையும் கவனித்தேன் நீர் யாவர் செய்யும் இத்தனை வாதமும் பிழையே. காதல் பெயராய் இருந்தாலென்ன? வினையாய் இருந்தாலென்ன? அவற்றில் ஒன்றை நிறுவியும் ஆவதென்ன? அதன் சமூக மொழி சூழல்பொருள் தான் இலக்கணக்குறிப்பில் எதிரொலிக்கும் எனும் குறைந்தபட்ச அறிவிருப்பின் இவ்வாறு பேசமாட்டீர். ஒருவகையில் மொழியாவும் குறிப்பிற்றோன்றல். காதலென்பதும் குறிப்பிற்றோன்றலே. அதை ஒன்றில் அடக்கவியலா.
ஒன்றாக்குவதுதானே இலக்கணியின் வேலை.
அறிவுடை அறிவிலியின் ஆயுதம்தான் குறிப்பிற்றோன்றல். எனக்கதில் உடன்பாடில்லை.
ஆம். எனக்குமில்லை. குறிப்பு சூழல் பொருத்தாயின் சூழல் பலவாகவிருக்க இயலா. குறிப்பும் ஒன்றாவதே பொருளியல்பு.
ஆம். நான் மொழியியல்பைச் சொன்னேன். விளக்கம் தான் வேண்டுமெனில். விளக்கியொன்றாக்க என்னாலுமியலும்.
எனிலென்னயியம்பு?
காதல் என்பது இடக்கரடக்கல்.
திறனிருப்பின் எவ்வாறு மொழிக.
காதல் என்பது முழுமையுடலுக்கான வேட்கை, முழுமையுடல் இன்மையோர்க்கு முழுமையுடலின் பகுதியதிகாரமாய் இயங்க விரும்பும் லட்சியம். காதலென்பது காமவேட்கையின் மடைமாற்றம். உடலிச்சையின் பண்பாட்டுப் பொருளிழப்பிற்கு ஈடாகும் மாற்று. காதலென்பது ஈருடல் இணைவின் பல்கருத்தேற்றக் காரணி, பாலின பாலாதிக்க விளையாட்டாக்கத்தின் தவிர்க்கவியலா கூறு. காதலென்பது ஆண் பெண் கருத்தை அழியவிடாது காக்கும் மோசம், எதிர்பாலின பாலுறவை மையப்படுத்தும் விசம். காதலென்பது குடும்பமெனும் சிறுவரசாங்கத்திற்கான அடித்தளம் பாலின ஏற்றத்தாழ்வைக் கற்றுக்கொடுக்கும் பட்டயப்படிப்பு. காதலென்பது நம் நனவிலி அம்மணத்தின் மீது போடப்பட்ட கோவணம். நாற்றத்தை மணமாக்கும் மனித முயற்சி. காதலென்பது ஆணுக்குப் பெண்ணை அடிமையாக்கிப் பார்க்கும் சமூக சடங்கு. ஓர் உடல் இன்னொரு உடல் மீது போடும் முன் ஒப்பந்தம். மொத்தத்தில் காதலென்பது பெயரும் வினையும் அன்று. இடக்கரடக்கல். அணங்கும் பிணியும் அன்று. அறிவில்லாமை.
புத்தியாகப் பேசுவதாய் உளறாதே.. இவையெல்லாம் உன் விளக்கம் அவ்வளவே.
முடிவான முடிவென்று ஒன்றுளதா? எல்லாம் ஓர் விளக்கம் அவ்வளவே. நானும் தான்.
தீசன்
இங்கு மெய்யென்று எதுமில்லை. எல்லாம் கற்பனையே.... என்பது பெருவாரியாக கருத்தினை மையபபடுத்தியவர்களால் உரைக்கப்படும்.
பதிலளிநீக்குஇலக்கண முறைப்படி என்னால் சரியான முடிவுக்கு வரமுடியாவிடினும்,
காதல் என்பது ஒருவித மாயை, மாயைகளின் இணைவு என்று தான் நினைக்கிறேன்.
அதனாலேயே அது கண்மூடித்தனமாக சுற்றித்திரிவதை விரும்புகிறது.
உண்மையல்லாத ஒன்று காதல். அனுபவ அறிவாகக் கூட அதனை எடுத்துக் கொள்ளலாம்.
அவரவர் விருப்பம் என்றும், ஒரு பதிலும் உள்ளது.
ஆம் தோழர். சிறப்பா சொல்லிட்டீங்க
நீக்குஅருமை
பதிலளிநீக்குகட்டுரையாளரின் இலக்கணத் திறமை எனை ஆச்சரியப்படுத்துகிறது.
பதிலளிநீக்கு