அண்மை

ஆண்மை அழிய வேண்டும் - தீசன்

ஆண்மை அழிய வேண்டும் - தீசன்
மிசெல் ஃபூக்கோ

பெண்கள் உண்மையான விடுதலை அடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும் என்பது பெரியார் கூற்று. எனக்கும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆண்மை ஆண்கள் உடலின் ஓர் பகுதி. இயற்கைக்கு விரோதம் செய்யலாமா? பெரியார் அதிமூடர். இப்படித்தான் பெண்களிடம் கருப்பையை அறு என்றும் கூறினார். அவர் சொல்வதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமானால் சாத்தியம். நடைமுறையில் முடியாதவை என்று நினைக்கும் கூட்டம் தான் அதிகம். பெரும்பான்மையே அவர்கள் தான். அதனால் பெரியாரின் கருத்து பலருக்கு ஒரு புலம்பலைப்போன்று கூட தோன்றலாம். அவர் மீது வெறுப்பேற்படும் வாய்ப்பும் அதிகம்.

கொஞ்சம் சிந்தித்ததுப்பார்த்தால் இது உங்களுக்கு விளங்கும். ஆண்கள், ஆண்களாக இருப்பதைக்காட்டிலும் ஆண்மையர்களாகவே இருக்கின்றனர்.

ப்ராய்டு இப்படிச் சொல்லுவார், “பெண்கள் தன்னை காயடித்தல் எனும் நிகழ்வின் வழி உணர்கிறார்கள்” என்று. இதில் கருத்து வேறுபாடு பலருக்கும் உள்ளது. ஆனால் அதில் ஒரு உண்மையும் இருக்கு.

ஆண்மை தன்னை பெண்மையிடருமிருந்து வேறுபடுத்திக் கொள்வதன் வழி தன்னாளுமையைக் காட்டிக்கொள்கிறது. இதே பெண்மைக்கும் பொருந்தும். அதாவது பெண்மை தன்னை ஆண்மையிடருமிருந்து வேறுபடுத்திக் கொள்வதன் வழி தன்னாளுமையைக் காட்டிக்கொள்கிறது.

ஆம்பளயா இருந்துகிட்டு பொம்பள மாரி குனிஞ்சி நடக்குற, பொம்பள மாதிரி அழுகுற, அதுக்கு ஏன் பொண்ணுங்க மாரி பேசுற, இந்த வயசுல உனக்கிப்படி தோனலனா நீ ஆம்பளயே இல்ல, ஆம்பளயா இருந்துட்டு மரமேறத்தெரியாதா, ஆம்பளயா இருந்துட்டு வண்டி ஓட்டத் தெரியாதா, ஆம்பளயா இருந்துட்டு நீச்சலடிக்கத் தெரியாதா, பொம்பள மாரி வீட்டுக்குள்ளேயே உக்காந்துகுறியே, உன் கை என்னடா வழவழனு பொண்ணு மாரி இருக்கு, இன்னுமா உனக்கு மீச வளர்ல அப்ப நீ அதுடா, பொட்ட ****...

இன்னும் எத்தனை வேண்டுமாயினும் சொல்வேன். எல்லாவற்றையும் அனுபவித்தவன்.


பொதுவாக சமூகத்தின் இந்த மொழி இயல்புகள் ஆண்மையை வரையறுப்பதாக நாம் எண்ணுவோம். ஆனால் இவை ஆண்மை இப்படி இருக்க வேண்டும் என்பதன் வழியாக பெண்மை இவ்வாறெல்லாம் இருக்கக்கூடாது என்றும் சொல்கிறது. இதைத்தான் அறிவாய்வியலில் அவாய்நிலை என்பர்.

ஆண்மை எப்படி முரட்டுத்தனத்தோடு இணைகிறதோ அதேவேளையில் அதேபோல பெண்மை மென்மையாக்கம் செய்யப்படுகிறது.

பெண்மை முரட்டுத்தனமாக இருக்கும்போது அவ்வியல்பு சமூகத்தில் ஆண்மைக்கு நிகராகப் பார்க்கப்படுவதால், ‘அடக்கமா நடந்துக்க, பொண்ணுமாரி நடந்துக்க’ என்று விமர்சிக்கப்படும்.

சரி. பெரியார் சொன்னதற்கு வருவோம். ‘பெண்கள் உண்மையான விடுதலை அடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்’ என்றது நடைமுறைக்கு சாத்தியமற்றதோ இயற்கைக்கு எதிரானதோ அல்ல.

பாலினம் என்பது ஓர் நிகழ்த்துதல். அது பொய்யானது. சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. அந்த சமூக கட்டமைக்குக் காரணம் இருக்கலாம். அந்தக்காரணம் ஆண் பாலுமையோரால் உருவாக்கப்பட்ட காரணம். அதனாலே அது நிச்சயம் பெண் பாலுமையோர்க்கு எதிரானது.

இதனால் உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை இருக்கும் ஆண்கள், தங்கள் ஆண் நடத்தையைக் கைவிடுங்கள். அதற்கு மாற்றுவடிவம் அல்லது வடிவமற்ற வடிவம் ஒன்று தற்போது இல்லாததால் பெண்களைப் போல நடந்து கொள்ளுங்கள் இயன்றவரையில்.

இதுமிகவும் சிரமம். ஐயாயிர வருட பொது சமுக இயக்கத்திற்கு எதிராக வாழ முடியுமா? வாழ்ந்துதான் ஆக வேண்டும். வாழ்தல் தான் எனக்குத் தெரிந்த ஒரே வழி.

பெண்களை ஒருபோதும் நான் ஆண்களைப் போல் மாறுங்கள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஆணாக வாழ்வதே வன்முறையாக இருக்கும் போது பெண்களை நான் ஒருபோதும் அ(வ்)வன்முறையைச் செய்யவிடமாட்டேன்.

இதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எனக்குத்தெரியவில்லை. இதனால் திருநர் மக்களுக்கு என்மீது அன்பும் வெறுப்பும் தோன்றலாம்.

பெரியார் சொன்ன ஆண்மை அழியவேண்டும் என்பதை நான் இப்படித்தான் பார்க்கிறேன். ஃபூக்கோ சொன்னதைப் பெரியார் அவருக்கு முன்பாகவே சொல்லி இருக்கலாம்.

ஒருகாலத்தில் நானும் பெரியாரை மூடர் என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் நம்மைக் காட்டிலும் பெரியார் ஒன்றும் அவ்வளவு மூடர் அல்லர்.

சொல்லப்போனால் பெரியாரின் சிந்தனைகள் 2100க்கும் மேலாக இருப்போரைப் போன்றும் நம்முடைய சிந்தனை இன்னும் சங்க காலத்தது போன்றும்தான் இருக்கிறது.

ஆண்கள் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. காதலிக்கவும் கூடாது. காதல் சிறு அரசை உண்டாக்குவதற்கான பயிற்சி வகுப்பு, முன்னோட்டத்தைப் போல. என் எண்ணம் அரசரே வேண்டாம் என்பதுதான்.

வேண்டுமென்றால் ஆண்களும் ஆண்களும் காதலியுங்கள். பெண்களும் பெண்களும் காதலியுங்கள். ஆண் பெண் திருநர்கள் காதலியுங்கள்.

பாலுறவை மையமிட்ட காதலுக்கு எதிராக இருப்பதுதான் நம் காதலாக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் ஆணும் பெண்ணும் காதலிக்கலாம்.

ஆண் பெண் காதல் பாலுறவு, குழந்தை பேறு, குடும்பம், அதே வன்முறை என்று போய் முடிவதால் அதற்கு எதிராக நில்லுங்கள் என்கிறேன்.

பாலுறவை மையமிடாத காதல் தான் என்னைக்கேட்டால் உண்மையான காதலாக இருக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறேன். குழந்தை பேறு கட்டாயம் கூடாது. ஒரு பத்து ஆண்டுகள் குழந்தை பிறக்காதுபோனாலே தொல்லை ஒழியும்.

சாதி, மத வன்முறைகளைக் குழந்தை என்ற பேரில் ஜெராக்ஸ் மிசினைப் போல நகலெடுத்துப் போடுவதுதான் பிள்ளை பேறு.

அது ஒழிந்தாலே பாதியென்ன முக்கால்வாசி பிரச்சனை ஒழிந்துவிடும்.

தீசன்

கருத்துரையிடுக

புதியது பழையவை