அண்மை

மனம் + உளைச்சல் = மலவுளைச்சல் - தீசன்

மொழி மல மன உளைச்சல் - தீசன்

கலவியைப் பற்றியும் படுக்கை நலங்குறித்தும் பலர் எழுதுகிறார்கள். மக்களின் நலத்திற்குப் படுக்கையறையைவிட கழிவறைதான் முக்கியமாக எனக்குப் படுகிறது. இந்தியச் சூழலில் மட்டும்தான் பெரும்பான்மை, காலைக்கடன் காலையிலேயே செலுத்தியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சப்பானில் காலை எழுந்தவுடன் உற்சாகமாக எவ்வித கவலையுமின்றி தூயக் காற்றை நுகர மக்கள் தெருக்களில் நடக்கத்தொடங்கி விடுகிறார்கள். அவ்வேளையில் எப்போது அடிவயிற்றை முட்டினாலும் அவர்களுக்குக் கவலையிராது. காரணம், ஐநூறு மீட்டருக்கு ஒரு கழிவறை அங்குள்ளது. அதுவும் வீட்டுக்கழிவறை போன்றே சுத்தமாக உள்ளது. இதுபோதாதா அவர்களின் உளைச்சலின்மைக்கு. இந்தியச் சூழலில் காலை எழுந்த உடனே மலங்கழித்தாக வேண்டும். காலை கடன்களை காலையிலே/ வீட்டிலே/ தங்குமிடத்திலே செலுத்தியவர்கள் தான் நிம்மதியாக இங்கு வாழவும் முடியும். பயணமேற்கொள்ளவும் முடியும். அவ்வாறு செலுத்தமுடியாதவர்கள், நாளது இடையில் இனி எங்கே போவது? சுத்தமிருக்குமா? தண்ணீர் வருமா? நினைத்த நேரத்திற்குக் கழிவறை கிடைக்குமா? அதுவும் இந்தியக் கழிப்பிடமாய் இருக்குமா? எனும் மனவுளைச்சலோடுதான் அதே நினைப்போடுதான் பயணத்தையே தொடங்க வேண்டியதாய் இருக்கும். மலச்சிக்கல் என்பது வெறும் உடலியல் பிரச்சனை அன்று. அது மனம் சார்ந்த உடலியல் கோளாறு என்று சமீபத்தில்  National Library of Medicine தெரிவித்திருக்கிறது. 

Research suggests that people with depression and anxiety have a greater risk of developing constipation. In one study, constipated patients were about 14 times more likely to be diagnosed with a mood or anxiety disorder. Though the exact reason for the correlation isn’t clear, researchers believe that when people are stressed, their bodies release hormones that disrupt digestion. (read more)

சமூக அழுத்தம், பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை எனப் பல்வேறு காரணிகளால் மனவுளைச்சல் வரலாம். இப்படியான மனவுளைச்சல் மலச்சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள். அதற்கான மருத்துவ தருக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அது எவ்வளவு உண்மை என்று என்னால் உணரமுடிகிறது. இந்தியா தனது, பண்பாட்டுச் சிறப்பை கலாச்சார வளத்தை, தொன்மையான மூடுண்ட கழிவறைகளைக் காட்டி பெருமைபீத்திக் கொள்கிறது. தற்கால வாழ்வை மறக்கடிப்பதுதான் இந்தியாவின் தத்துவமே. ஒருநாட்டின் வளம் அந்த நாட்டு மக்களின் உடல் நலத்தில் இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். உலகிலேயே அதிக ஆண்டுகள் (65 - 85) வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் மூன்று தான். அவை சப்பான், இத்தாலி, ஃபின்லாந்து. இந்த மூன்று நாடுகளிலுமே சாலைகளில் தோராயமாக 200 முதல் 600 மீட்டருக்குள் எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிப்பிடம் செய்யப்பட்டிருக்கிறது. அவை தினமும் அவ்வவ் தெரு மக்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ தூய்மையாக இருக்க நிருவாகமும் செய்யப்படுகிறது. இந்தியாவைப் போன்றில்லாமல் இம்மூன்று நாடுகளிலுமே கட்டணக்கழிப்பிடத்தைக் காண்பது மிக மிக அருமை. சீநாற்றத்தோடு தூய்மையின்றி காண்பது அதைவிட அருமை. இங்கு கட்டண கழிப்பிடமே அப்படித்தானுள்ளன. "மக்கள்தானே ஒழுங்காய் பயன்படுத்துவதில்லை அரசாங்கத்தை நோவதென்ன" என்று சிலர் கேட்கலாம். அரசே இவ்வாறு சொல்வதாயின் அதைவிட கீழ்த்தரமான அரசியல் இருக்காது. மக்களை மேய்க்கத்தான் அரசு. குறைபட்டுக்கொள்ளவல்ல. அதோடு நான் இயங்கியலை முழுமையாக ஏற்பவன். நோயால் இங்கொருவர் இறக்கின்றார் எனில் அதை அந்நாட்டு அரசாங்கம் செய்த கொலையாகவே நான் காண்பேன். “படுத்த உடனே தூங்குவதும் எழுந்த உடனே கழிப்பதும் தான் நோயற்ற உடல்” எனும் கூற்றையே நான் சமூகத் தந்திரமாகத்தான் பார்க்கிறேன். முழுமை நலமான உடல் எனும் கருத்தாக்கத்தின் விளைவிது. உண்மையில் காலை எழுந்த உடன் மலங்கழிப்பது எப்படி பெரும்பான்மை சாதாரணமோ அதேபோல்தான் காலை உணவு கொண்டபிறகு கழிப்பதும், மதிய வேளையில் கழிப்பதும் நாளின் எவ்வேளையில் கழிப்பதுமாகும். இதை மருத்துவத்துறையில் Gastrocolic Reflex என்கிறார்கள். ஒருவர் வாரத்திற்கு மூன்று முறைதான் கழிக்கிறார் எனில் அதுவுமே சாதாரணம்தான். அவருக்கு எந்த நோயும் இல்லை. ஆனால் இந்திய உளவியலைப் பாருங்கள், ‘காலை எழுந்தவுடன் உனக்கு வரவில்லையா உனக்கு நோயுடல்’ என்கிறது. இதை நான் சமூகத்தந்திரம் என்றது எவ்வாறெனில், சமூகக் குறையை இத்தொடர் சமன்படுத்திக்கொள்கிறது. அதாவது நம் சமூக வெளியில் வெளியே மலங்கழிப்பது பாதுகாப்பானது அன்று, அத்தோடு அதற்கான வசதியும் எல்லா நேரமும் கிடைப்பதில்லை. அரசாங்கமும் இதற்கான எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. இத்தகைய காரணங்களைக் கொண்டு பொது சமூகக் கூட்டு நனவிலி ஒன்று உருவாகிறது. அது, காலை எழுந்த உடனே மலங்கழித்தாக வேண்டும் என்பது. கழிக்காதோரைச் சீக்கோர் என்பது. பொதுக்கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதில் நோய் அச்சத்தை உருவாக்குவது. இவ்வாறு கழிக்க இயலாதோர் எவ்வித உடலியல் சிக்கலும் இல்லாதோராய் இருப்பினும் இந்த சமூகக் கூட்டு நனவிலியே இவர்களைத் தன்னை நோய்கொண்டோராக நினைக்கச்செய்கிறது. சமூகக் கூட்டு நனவிலி என்பது எப்போதுமே நெடுங்கால அதிகாரத்திற்குத் துணைச் செய்யும் கருவி என்றுணர்க. அரசாங்கத்தின் இயலாமையை அல்லது அதன் இருப்பின் நிலைபேறாக்க சார்பாகத்தான் எல்லாத்துறையும் இயங்குகின்றன. அதில் மருத்துவத்துறையும் அடங்கும். எவையெல்லாம் அதிகாரத்தின் பகுதியாக இயங்க முனைகின்றனவோ அவை ஏதும் அரசை பாதிப்பதில்லை. அல்லது அரசை பாதிக்காத எல்லாம் அதிகாரத்தின் பகுதியாக இயங்கும். அரசு எங்கும் தூய்மையான கழிவறைகளை அமைத்தால் நோய் குறையும் மக்களின் நலம் பெருகும். மருத்துவத்துறை பாதிக்கும். காலை எழுத்தவுடன் மலங்கழிக்க முடியாதது சாதாரணம்தான் என்பதை எல்லோரும் உணர்ந்துவிட்டால் பொதுக்கழிப்பிடத் தேவை கூடும். தூய்மை குறித்தான அவசியமேற்படும். பொதுக்கழிப்பிடத்தின் மீதான மக்களின் அச்சம் குறையும்.  இது அரசிற்கும் சிக்கலைத் தரலாம். மொத்தத்தில் மொழியும் அதிகாரமும் இயல்பு, சரி, நலம் என்ற பேரில் மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு துறைகளால் ஒன்றோடொன்று இணைந்து இயங்கி கொண்டிருக்கின்றன. எவை எல்லாம் இயல்பாகவும் சரியாகவும் நலமாகவும் சொல்லப்படுகின்றனவோ அவற்றை மீண்டும் ஒருகணம் யோசித்துப்பார்க்க, ‘இது எந்த வகையில் அதிகாரத்திற்கு உதவுகிறது என்று’.. அப்போது மிகவும் எளிதாக அக்கூற்றை நாம் கட்டுடைக்க இயலும். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பொதுக்கழிப்பிடத்தைப் பயன்படுத்த வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது திணறிக் கொண்டிருந்த அதிகாரிகளைப் பார்த்துவிட்டு அப்படியே திருவாரூரில் ‘பொதுக்கழிப்பிடத்தைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று கூறும் மனநிலைக் கொண்ட மக்களை நினைத்துப் பார்த்தபோது இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது.

தீசன்

2 கருத்துகள்

  1. அரசாங்கம் நாம் தான். கூட்டுக்கொலை குற்றம் ஆகாது. இந்திய சட்டம் அது.


    நாம் எல்லோரும் உயிருண்ணிகள் தாம்..

    கேவலமான நிலையிலேயே இருக்கிறோம்.

    அவ்வபோது என்னை நான் அருவருத்துக்கொள்வதில் இது மாதிரியான நிகழ்வுகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. அரசாங்கம் திருந்தும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை படிக்கும் பொதுமக்கள் தங்கள் அடிப்படை புரிதலில் திருத்தம் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    உண்மையில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படுமானால் ஆடவருக்கு 30% கவலையும் மகளிரின் 70% தயக்கமும் தகர்க்கப்படும்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை