திருநங்கைகள் பொதுநீரோட்டத்தில் வாழும் ஆண்கள் பெண்களாலே குப்பைகளாக அடித்துச் செல்லப்பட்டவர்கள். பாலாதிக்க அதிகார சமூக கட்டமைப்பால் தன்னுடல் பற்றிய விருப்பத்தை பாலீர்ப்பைப் பேசக்கூட தகுதியில்லாதவராய் ஒடுக்குதலுக்கு உள்ளானவர்கள். ஆண்டாள் பிரியதர்ஷினி திருநங்கைகளைப் பற்றி ஒரு பெண் நிலையிலிருந்து அனுதாபக் குரலாய் “நானும் இன்னொரு நானும்” எனும் கவிதை நூலை எழுதி இருக்கிறார். மிகவும் சிறிய நூல் அது. பொதுவாக சமூகம் திருநங்கைகளை அடையாளம் கண்டு ஓரளவிற்கேனும் விழிப்புணர்வு பெற்ற அளவிற்கு இன்னுமும் திருநம்பிகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவில்லை. உடலால் ஆணாகப் பிறந்து பின் மனத்தால் பெண்ணாக உணர்ந்து தானொரு பெண்ணே என்று பிரகடனப்படுத்துபவர்கள் திருநங்கைகள். ஆனால் உடலால் பெண்ணாகப் பிறந்து மனத்தால் ஆணாக உணர்ந்தாலும் தன்னை ஆண் என்று சமூக கட்டுப்பாடுகளால் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் திருநம்பிகள். திருநங்கைகளைப் பேசிய அளவிற்கு இன்னும் திருநம்பிகளைப் பற்றி சமூகம் பேச முன்வரவில்லை. அதை தனிச்சொல், பால்மணம் முதலிய இதழ்கள் தான் முன்னெடுக்கின்றன. இந்தக் கவிதை தொகுப்பு திருநங்கை பற்றிய பெண்நிலை பார்வை. உண்மையில் திருநங்கைகளைப் பெண் என்று பார்ப்பதில் தான் நமது சமூக வெற்றி உள்ளது. இந்தக் கவிதைகள் ஆண்டாள் பிரியதர்ஷினியின் வழக்கமான கவிதையாக்கத்திலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. காரணம் இவை குரலுக்கான எதிர்க்குரல். மொழியின் இன்னொரு வடிவம். திருநங்கை அரசியல் தான் உண்மையில் பெரியாரிய அரசியல். அந்த அடையாள நிறுவலை ஆண்டாள் பிரியதர்ஷினி வெளிப்படுத்தும்போதெல்லாம் தன் பெண்நிலை விலகல் தெரிகின்றது.
திருநங்கை பற்றிய கவிதைகள் அல்லது ஹைக்கூகள்
நான் யார்?நீ யாரோஅதேதான்
பெண்ணைகர்ப்பம் சுமக்கும்ஆண் நான்
அதே வினாடியில்இறப்பும் பிறப்பும்என் சிறப்புஅவன் இறப்புமரண சுகம்அவள் பிறப்புஜனன சுகம்
சுவாசிக்க விடுஎனக்கும் பங்கு உண்டுபூமிக்காற்றில்
நான்கேலிப் பொருள் எனில்நீயும் எனக்குபோடா…
வாழ்க்கையில்வலி உனக்குவலியே வாழ்க்கைஎனக்கு
ஆண் உடைவசதி நங்கைக்குசதி திருநங்கைக்கு
எனக்கு உடலில்உள்ள குறைபாடுஉனக்குஉள்ளக் குறைபாடு
சரஸ்வதி சொன்னாளாபள்ளி கல்லூரியில்நானும் படித்தால்அவளுக்குத் தீட்டு என
குறித்துக் கொள்உன்னைஆண் பெண் எனகுறித்துக்கொள்கிறேன்என்னைமனிதகுலம் என
சட்டவிரோதம்ஆண்குறி நீக்குவதுபோடா நாயேஎன் வலி தெரியுமாசட்டத்துக்குவாழ்வேன்என் இஷ்டத்துக்கு
பால் மாற்று அறுவைஅவசியம்பெண்ணாக மாறஎனக்குமனிதனாக மாறஉனக்கு
நல்லது நான்வாழ்த்துவதுநல்லதாநீ தாழ்த்துவது
கடை கேட்கிறேன்குடல் பசிக்குஎன்னை கேட்கிறாய்உடல் பசிக்கு
பாலியல் செய்தேனும்பசி தீர்க்க வேண்டும்வயிற்று உக்கிரம் எனக்குஉடம்பு வக்கிரம் உனக்கு
பால் மாற்றுஅறுவை ரணம்சாதா ரணம்சமூக ரணம்சதா ரணம்
கை கழுவுறது குடும்பம்கை நழுவுகிறது வாழ்க்கை
வேண்டும்இட ஒதுக்கீடுவேண்டாம்சமூக ஒதுக்கீடு
பெண்ணாகாமல்உயிரோடு நான் சாக வேண்டுமாஉனக்கு கொல்லி போடும்கடமைக்காகபெண் போட்டால்எரியாத கொள்ளி?
அதிக வித்தியாசம்இல்லைகசாப்புக் கடைக்காரருக்கும்என் அறுவை மருத்துவருக்கும்
மேற்கண்ட கவிதைகள் அனைத்துமே தான்மையிலிருந்து/ சுயத்திலிருந்து/ ஆளுமையிலிருந்து விடுபட்ட குரல்கள். ஆனால் ஆண்டாள் பிரியதர்ஷினி எதிர் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தினாலும், மொழியின் முன்னமேதயாரான வடிவத்திலேயே அது எழுதப்படுகிறது. இதனால் கவிதையுள் பொதுபுத்தியும் இணைகிறது.
ஆண்பால்பெண்பால்நான்அதற்கும் அப்பால்மூன்றாம் பால்
இந்தக் கவிதை பொது சமூக மன வெளியில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. அவ்வெளி ஆண்பாலை முதற்பாலாகவும் பெண்பாலை இரண்டாம் பாலாகவும் இவை இரண்டும் அல்லாத மற்றொரு பாலை மூன்றாம் பாலாகவும் மொழியில் கட்டமைக்க முயற்சி செய்திருக்கிறது. ஆண், பெண் பாலாதிக்க மைய மனநிலையிலிருந்து நோக்கும்போதுதான் திருநங்கைகள் திருநம்பிகள் மூன்றாம் பாலாக மொழியால் விளக்கப்படுகிறார்கள். திருநர் எழுத்து இந்தப் பாலாதிக்க மைய அதிகாரத்திற்கு எதிராக இயங்க வேண்டும். மைய நீரோட்ட மொழி நடையைத் திருநர் எழுத்து ஏற்கும் பட்சத்தில் திருநருக்கான அடையாளத்தையே ஆண்களும் பெண்களும் வழங்கியதாக ஆகிவிடுகிறது. அதனால் இக்கவிதை மீண்டும் மூன்றாம் பால் என்று தன்னை அடையாளம் செய்து கொள்வதன்வழி ஆண்பால் பெண்பால் பாலாதிக்க மைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்கிறது.
என் இருப்புஎட்டுக்கும்பத்துக்கும் நடுவேஉன் இருப்புபூஜ்ஜியத்துக்கும் கீழே
இந்தத் தொகுப்பில் இருக்கும் திருநங்கை பற்றிய கவிதைகளிலே மிகவும் மோசமான கவிதை இதுதான். ஆண்டாள் பிரியதர்ஷினி பாலாதிக்க மனநிலையில் இருந்துதான் இதை எழுதி இருக்கிறார். ஒன்பது/ ஒம்போது என்று திருநங்கைகளைக் குறிப்பிடும் சொல் மதிப்பற்றது இழிவு பொருள் கொண்டது. இந்தச் சொல்லை பறை/ பறைச்சி/ பறையன் போன்ற அடையாள அரசியலுக்கான சொல்லாக மாற்றமுடியாது. பண்பாட்டு மதிப்பற்ற இந்தச் சொல்லை மாலினி போன்றோர் அடையாள அரசியலுக்கானதாய் மறுகோரியது (டிக்கெட் 9) மிகவும் கண்டனத்திற்கு உரியது. திருநங்கைகள் தங்களை யார் எப்படி அழைக்க வேண்டுமென்று முடிவுசெய்யக்கூட தகுதி இல்லாதவர்களா? நேகா தோழர் போன்றோரே இந்த மறுகோருதலுக்கு எதிராக எழுதி வந்தார். ஆண்டாள் பிரியதர்ஷினியும் மாலினியின் பாலாதிக்க மனநிலையும் இவ்விடத்தில்தான் இணைகிறது. திருநங்கைகளை “ஒம்போது” என்று அழைப்பது தவறானது சட்டவிரோதமானது கண்டனத்திற்குரியது. அதை மறுகோருவதற்கு Ally என்று கூறிக்கொண்டு வாழும் பாலாதிக்கவாதிகளுக்கு உரிமைகிடையாது. ஆண்டாள் பிரியதர்ஷினிக்கும் இல்லை.
அதே சமயம் திருங்கைகள் பற்றி இக்கவிதைத் தொகுப்பில் மிகவும் அற்புதமான கவிதைகளும் இருக்கின்றன. அவை திருநங்கைகளைப் பெருமிதவயப்படுத்தும் தன்மை கொண்டவை.
சுயம்பு நான்என்னைப் படைத்தேன்கடவுளை ஜெயித்தேன்
நானே அவதாரம்கல் எல்லாம்அரிதாரம்
செதுக்குகிறேன்ஆண் கல்லில்பெண் சிற்பம்அர்ஜுனன் தவம் இல்லைஅரவாணி தவம்
உன்பெயர் மாற்றம்மூடநம்பிக்கைக்காகஎன்பெயர் மாற்றம்பெண்மை நிலை நிறுத்தும்திட நம்பிக்கைக்காக
நீசாம்பலாவாய்உன் மரணத்துக்குப்பின்நீடுழி வாழ்கிறேன்எனது ஆண் மரணத்துக்குப்பின்மரணம் தோற்கிறதுஅரவாணியிடம்
பீனிக்ஸ் பறவை நான்சாம்பலாக்கினேன்ஆணை எரித்துசந்தோசமாக்கினேன்பெண்ணை தரித்து
எனக்குஆண் உசத்தியும் அல்லஆண்மை தேவையும் அல்லபெண்ணியவாதி நானே
பெண்ணாசை துறப்பதா துறவுவெங்காயம்நான் துறப்பதுஆண் ஆசைதுறவினும் உயர்வு நான்
கர்ப்பம் தரிக்கும்குழந்தை பிறக்கும்தாய்ப்பால் சுரக்கும்தாய்மை கிடைக்கும்விஞ்ஞானம் ஜெயிக்கும்ஒரு நாள்
திருநங்கைகள் பெண்களே. இதில் யாரேனும் உடன்படவில்லையானால் அவர்களுக்கு மூளை சரியில்லை என்றுதான் அர்த்தம். ஆண்டாள் பிரியதர்ஷினியின் “நானும் இன்னொரு நானும்” எனும் இந்தத் திருநங்கைகள் பற்றிய கவிதைத் தொகுப்பு திருநங்கைகளைப் புறநிலையிலிருந்தும் அகநிலையிருந்துமாக அணுகியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. தற்போது அக்னி பிரதீப், மரக்கா, நேகா, லக்சயா மன்னார் போன்ற திருநங்கை கவிஞர்களே முன்வந்து அகநிலை மற்றும் புறநிலை என்ற இருவிதத்திலும் கவிதை எழுதுகிறார்கள். திருநங்கை பற்றிய அடையாள அரசியல் சமூகத்திற்குத் தேவையான ஒன்று. திருநர் அல்லாதவர்கள் அவ்வடையாள அரசியலில் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாததுதான் எழுத்திற்கான கலைக்கான அறமாக இருக்க முடியும்.
கஸ்தூரி
(தோழர் கஸ்தூரி அவர்களது படைப்புகளை அவரது சிவனி வலைப்பூவில் வாசிக்கலாம். தொடுப்பு - www.kasthurigai.blogspot.com)
குறிச்சொல்:
கவிதை