அண்மை

"பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே" பாடல் வரிகள்


பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

பாய் விரிதல்போல் விரியும் நீரின் பரப்பிலே
வாய் விரியும் செங்கமலம் பவள நிறத்திலே
காவியங்கள் இப்படித்தான் தஞ்சையைப் பாடும்
களஞ்சியங்கள் நிறைந்தும் மக்கள் வயிறுகள் வாடும்
வயிறுகள் வாடும்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

காலங்காலமாய் வயலில் உழுது வந்தார்கள்
கைகட்டிப் பண்ணையாரைத் தொழுது வந்தார்கள்
கோடை வெயில் சுடுநெருப்பில் தீய்ந்து வந்தார்கள்
கொழுமுனைகள் தேய்வதுபோல் தேய்ந்து வந்தார்கள்
தேய்ந்து வந்தார்கள்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

செந்நீரில் கண்ணீரில் வியர்வை கலந்து
தேகமே தூரிகையாய் வண்ணம் குழைத்து
பொன்னிவள நாடுஎனும் ஓவியம் வரைந்து
பொன்னிவள நாடுஎனும் ஓவியம் வரைந்து
புழுதிமகன் புவிகளித்தான் மனதுமகிழ்ந்து
மனதுமகிழ்ந்து

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

வானழுத கண்ணீரை மழையென சொல்வார்
பூவழுதக் கண்ணீரைத் தேனென சொல்வார்
சாணிப்பால் சவுக்கடியின் வலிப்பொறுக்காமல்
சாணிப்பால் சவுக்கடியின் வலிப்பொறுக்காமல்
தஞ்சைமகள் அழுத கண்ணீர் காவிரி என்பார்
காவிரி என்பார்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

சந்திரனில் முகம்பார்க்கும் தஞ்சை கோபுரம்
கோபுரத்தை சமைத்தவரோ குப்பையின் ஓரம்
ஆண்டை வர்க்கம் எழுதி வைத்த அடிமை சாசனம்
ஆண்டை வர்க்கம் எழுதி வைத்த அடிமை சாசனம்
அழித்தெழுத வந்ததுதான் செங்கொடி ஆகும்
செங்கொடி ஆகும்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

மணல்வெளியாய் கிடந்த மக்கள் மனவெளிக்குள்ளே
மறைந்திருக்கும் புரட்சியெனும் ஊற்றுகள் தோண்ட
தளபதிகள் செங்கொடியின் தலச்சன் பிள்ளைகள்
சங்கொலித்த ஓசைக்கின்று வயது ஐம்பது
வயது ஐம்பது

வயதாக வயதாக வாலிபமாகும்
வரலாறே மானுடத்தின் தத்துவமாகும்
எனவேதான் வெண்மணிப்போல் அக்கினி குண்டம்
எனவேதான் வெண்மணிப்போல் அக்கினி குண்டம்
எத்தனையோ தாண்டியும் நம் யாத்திரை தொடரும்
யாத்திரை தொடரும்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

சோதனையின் காரிருளால் துயர்படும் போதும்
வேதனையின் தடைச்சுவர்கள் எதிர்படும் போதும்
தஞ்சை தந்த தியாகிகளே உன் திருநாமம்
தஞ்சை தந்த தியாகிகளே உன் திருநாமம்
உச்சரித்தால் நெஞ்சில் வரும் ஒளிப்பிரவாகம்
ஒளிப்பிரவாகம்

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே

முன்னேறு முன்னேறு உழவர் சங்கமே
மண்ணுமதன் மணமும் இனி நமது சொந்தமே
வயல்வெளியும் வயல்வெளிமேல் குடைப்பிடித்தாடும்
வயல்வெளியும் வயல்வெளிமேல் குடைப்பிடித்தாடும்
வான்வெளியும் பாடுக நம் உரிமை கீதமே
உரிமை கீதமே

பூவிரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே
பொன் வயல்கள் விடியுமடி வானம் வரையிலே
வானம் வரையிலே
வானம் வரையிலே
வானம் வரையிலே
வானம் வரையிலே

-----------------------------------------------------------

நன்றி - CPIM, தோழர். குமாரராஜா (பாடியவர்) மற்றும் தீக்கதிர்

கருத்துரையிடுக

புதியது பழையவை