அண்மை

காலம் அல்லது தான்மை - தீசன்


நான்காம் பரிமாணமான காலம், தான்/ தான்மை/ சுயம் எனும் கருத்துப் பொருளால் இயங்குவதென்னும் கருதுகோள், அறிவு வரம்பினுக்குட்பட்டு நிற்பதால் விரிக்க இயலாது போகிறது. அல்லது அறிவியல் புலத்தோர் கூடியமட்டும் கண்டடைவர். சூரியன் முதலிய அண்டப் பொருட்கள் தான்மை உருவாய் நிற்கும் நம் கண்ணுக்குப் புலப்படும் காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் ஏரணம் – அது வரையறுக்கமுடிவது அல்லது அதற்கான அளவைகள்/ புலன்கள் நம்மிடை உள்ளன என்பது. அதற்குக் காலம் எட்டு நிமிடமாம். இருக்கலாம். ஒரு ஒளி நம் கண்ணகத்துப்புக கொஞ்சம் காலம் எடுப்பது இயற்கை. ஒளி காலம் எடுக்கும் என்பதை ஒலி எடுக்கும் காலங் கொண்டு வேறுபடுத்த இயல்கிறது. எனில் ஒளியும் ஒலியும் கடந்த காலத்துப் பொருட்கள். தான்மை உரு/ நாம் ஒரு பொருளைக் காணுவோமேயானால் அதன் கடந்தகாலத்து ஒளியே நம் கண்ணினை வந்தடையும். இதன் ஏரணம் கடந்த காலத்துப் பொருளுக்குத் தான்மை இல்லை என்பதை ஏற்கிறது. நாம் இரண்டு தான்மை உருக்கள் ஒன்றையொன்று காண்பதாகக் கொள்வோம். நாம் காணும் ஒருவரின் கடந்த காலத்து உருவே நம்மை வந்தடைகின்றது. நம்மைக் காணுவோருக்கும் நமது ஒளி கடந்த காலத்தினது. இது மனித அளவைகளால் கண்டடையமுடியாதபடிக்கு துமிநிலைப் பண்பைக் கொண்டிருக்கும். எனில் எங்கே போனது நிகழ்காலம் என்றால் அதுதான் தான்மை எனும் பெயர் கொண்டு இயங்கும் காலமாயுள்ளது. நிகழ்காலமென்பது/ நிகழ்காலமென்னுங் கருத்து, எனக்கானதாய் இருக்கமுடியுமே ஒழிய எல்லோர்க்குமாய்/ இயற்கையாய்/ இயல்பாய்/ பிரபஞ்ச நியதியாய் இருக்க வாய்ப்பில்லை. புலன்கள் கடந்த காலத்தை நுகரும் கருவிகள் எனும் உண்மை பலருக்கு இன்னும் விளங்கவில்லை. கடந்த காலம் என்றதுகூட வசதிக்காகச் சொல்லப்பட்டதிலிருந்து சொன்னது. இதனைச் சொல்லுணர்ந்தால் நன்கு விளங்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை