தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும்,
அரசு கல்லூரி மாணவனில் ஒருவன் எழுதிக்கொள்வது. ஐயா, எனதிந்த சில கேள்விகளுக்கு தயை கூர்ந்து பதில் தருமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்கு நன்றாக பசியெடுக்கும் போது ஒரு தட்டில் நன்கு அலங்கரிக்கப்பட்ட உயர்தர உணவு ஒன்றும், இன்னொரு தட்டில் சாதாரண அலங்கரிப்பில்லாத உணவு ஒன்றும் எடுத்து வந்து வைக்கப்படுகிறது. இதில் எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள், உணவிற்கா? அலங்கரிப்புக்கா?
எல்லோரும் உணவிற்கு என்று கூறும் போது, பள்ளியும் கல்லூரியும் 'இல்லை, அலங்கரிப்புக்குத்தான்' என்று கூறுவதை உங்களால் கேட்க முடிகிறதா?
ஆம் ஐயா! இது தான் உண்மை, நானொரு இளங்கலை மாணவன். இந்த பருவத்தில் எனக்கு ஏழு தாள்கள் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாளும் 100 மதிப்பெண்ணை கொண்டிருந்தால், அதில் 75 மதிப்பெண் எழுத்து தேர்வாகவும் மீதி 25 மதிப்பெண் அகமதிப்பீட்டுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த அகமதிப்பீட்டை வழங்க எல்லாத்துறை மாணவ மாணவிகளுக்கும் Assignment மற்றும் Test வைக்கப்படுகிறது.
இந்த Assignment ஒன்றுக்கு 5 மதிப்பெண்கள் தரப்படுகிறது.
ஐயா, ஆசிரியரால் தரப்படும் ஒரே மாதிரியான Assignment யினை தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் தரப்படுவதில்லை.
யார் நன்றாக காகிதத்தை அலங்கரித்து தருகிறார்களோ அவர்களுக்கே முழு மதிப்பெண்ணும் தரப்படுகிறது. பிறருக்கில்லை.
கலர் பேனாவை பிரயோகிக்காமல் இருக்கும் ஒருவருக்கு 5 லிருந்து 1 கழிகிறது.
காகித ஓரங்களுக்கு கலர் டேப் ஒட்டாதவர்களுக்கு இன்னொரு மதிப்பெண்ணும் கழிகிறது.
அழகாய் எழுதாதவருக்கு ஆசிரியர் 3 க்குள் என்ன நினைக்கிறாரோ, அந்த எண்ணையே மதிப்பெண்ணாய் போடுகிறார்.
இவையெல்லாம் சரியா?
'கலர் பேனா' வாங்க இயலாத ஒருவரால் எப்போதும் 5 மதிப்பெண்ணை வாங்கவே முடியாதா?
'கலர் டேப்' ஒட்டவே வசதியில்லாத ஒருவர் என்ன செய்வார்?
முதலிலிருந்து முடிவு வரை நீல நிறத்திலே எழுதினால் என்ன? அர்த்தங்கள் எல்லாம் ஒன்று தானே
எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரமல்லவா, இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்வது எவ்வகையில் சரியாகும்?
'அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல' என்று படிக்கிறோம். அதன்படியே வாழ்வது சிறப்பாகுமா? அல்லது அதை மனனம் செய்து நாலு பேரிடம் ஒப்புவித்து காட்டுதல் பெருமையை தருமா?
ஐயா, எனது கோரிக்கை இது தான்.
இந்த Assignment பழக்கத்தை அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் கைவிட வேண்டும்.
ஒன்றை பார்த்து எழுதும் போது அது நமக்கு மனதில் பதிந்தாலும் அதற்கு மதிப்பெண் தரும் பட்சத்தில் பல்வேறு பாகுபாட்டிற்கு உள்ளாகிறது.
ஒருவரது அழகான எழுத்துக்கு அதிக மதிப்பெண்ணும் இன்னொருவரின் கிறுக்கல் எழுத்துக்கு குறைந்த மதிப்பெண்ணும் தருவது, வெள்ளையாய் இருப்பவன் தான் உயர்ந்தவன் என்றும் கருப்பாய் இருப்பவன் தாழ்ந்தவன் என்றும் கூறும் அக்கால சாதிய ஒடுக்குமுறையைத்தான் எனக்கு நினைவிற்கு கொண்டு வருகிறது.
Assignment வேண்டாம் என்பதற்கு இதை விட தகுந்த உதாரணம் என்னால் சொல்லமுடியாது ஐயா.
ஆசிரியர்கள் எங்களுக்கு எழுத்து வேலையே தரவேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு மதிப்பெண் வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
Assignment க்கு தரப்படும் மதிப்பெண்ணிற்கு மாற்றாய் வகுப்பில் நடத்தப்படும் Test-யே 25 மதிப்பெண்களுக்கு நடத்துமாறும் அதையே அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக கருதிற்கொள்ளும் படியும் உத்தரவிடுமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கருணை உவந்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவும்.
வகுப்பில் நடத்தப்படும் சிறு தேர்வுகளையும் (Test) வீட்டிலேயே Assignment போல எழுதி எடுத்து வர சொல்கிறார்கள். அதனால் அதற்கும் Assignmentக்கு எப்படி மதிப்பெண் போடுகிறார்களோ அதே மாதிரியே கணக்கில் கொள்கிறார்கள். அதனால் Test-கள் வகுப்பில் தான் நடத்தபட வேண்டும் என்றும் அதற்கான மதிப்பெண்கள் கருத்தை பொருத்து தான் அமையவேண்டுமேயன்றி எழுத்தை பொருத்து அல்ல என்பதை கண்டிப்புடன் தெரிவிக்குமாறும் மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஒரு மாணவக்குடி
👌👌 , கோரிக்கையை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு"ஆசிரியர்கள் எங்களுக்கு எழுத்து வேலையே தரவேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு மதிப்பெண் வேண்டாம் என்று தான் கூறுகிறோம்."
பதிலளிநீக்குஇதுதான் கோரிக்கை எனில் நானும் உடன்படுகிறேன்..
ஆனால்
கையெழுத்து பயிற்சி என்பதும் கல்விகற்பதில் ஒரு உன்னத முறைதான்.. தொழில்நுட்ப வசதிகளால் இன்றுஅது அவசியமற்றதாய் தோன்றினாலும்கூட அது இன்றியமையாத ஒன்றுதான்!
எத்தனை புதுமையான வாகனங்கள் வந்தபோதிலும் மனிதன் இன்னும் நடப்பதை மறக்காமல் இருப்பதை போல கைப்பட எழுதுவதும் நல்ல பழக்கம் தான்.
உண்மையில் இந்த பள்ளி கல்லூரியை தாண்டிவிட்டால் அநேகம்பேருக்கு எழுதிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமலே வாழ்வு ஓடி முடிந்துவிடுகிறது..!
assignment க்கு ஒப்புகொண்டபிறகு
வெறுமனே கருத்தைசொல்லி நகர்வதை காட்டிலும் அந்த தாளில் அந்த கருத்திற்காக நீங்கள் மெனக்கெட்டிருப்பதை காட்டும்விதமாக அழகுற வடிவமையுங்கள்.. பேனா கூட தேவையில்லை வெறும் பென்சில்கொண்டுகூட நயமிகு ஒப்பனைகளை காண்பிக்க முடியும்..
ஆனால் இயந்திரதனமாக வண்ணம்பூசி அட்டைபோட்டு உள்ளே எதை கிறுக்கியிருந்தாலும் மதிப்பெண் போட்டுநகருகிற கடனேஎன பணிகழிக்கும் ஆசான்களிடம் சிக்கிக்கொண்டவர்களுக்கு நீங்கள் கேட்கிற கோரிக்கை நியாமானதாகவே தோன்றும்.