மரணம்
உடலை விட்டு
உயிர் விலகும்
தருணம்
விலகிய உயிர் புறப்பட்டு
புதிய உடலில்
புகுந்து விடும்
மரணத்திலும் மகிழ்ச்சி
அடைபவன் உண்டு
மரணச்செய்தியை ஊருக்கு
அறிவிப்பவன்
மகிழ்ச்சி அடைகிறான்
அவனிடம் கடன் வாங்கியவன்
மகிழ்ச்சி அடைகிறான்
மாலை கட்டுபவன்
மகிழ்ச்சி அடைகிறான்
பந்தல் போடுபவன்
மகிழ்ச்சி அடைகிறான்
பாடை கட்டுபவன்
மகிழ்ச்சி அடைகிறான்
குழி வெட்டுபவனும்
மகிழ்ச்சி அடைகிறான்
மரணித்தவன் கூட
மகிழ்ச்சி அடைகிறான்
ஏனென்றால்
அவனுக்கு நேற்றைய கவலை
இன்று இல்லை
பெரிய மனிதன்
என்று பெயரெடுத்தவன்
பிணம் என்ற
புதிய பெயரில்
அழைக்கப்படுகிறான்
மாட மாளிகைகளும்
தோப்பு துரவுகளும்
நேற்றுவரை
அவன் பெயரில்
இன்று அவனுக்கு
பெயரே இல்லை
உருக்குலைந்த உடலோடு
உறவுகள் வாழ்ந்திட
கூடாதே என
உருவாக்கியவன்
உருவாக்கியது
உயிர் போன
உடலுக்கு
துர் வாடை
மணம் கமழும்
வாசனை பத்திகளும்
மலர் மாலைகளும்
இதனை மட்டுபடுத்தவே
ஜனனம் கூட
ஒரு புகை வண்டி
பயணம் தான்
புகைவண்டி பயணத்தில்
செல்லுமிடம் செல்ல
சீட்டு ஒன்று உண்டு
ஆனால்
வாழ்க்கை பயணத்தில்
இறக்கி விடும்
இடத்தில்
இறங்கிவிட
வேண்டும்
இலக்கு என்று ஒன்று
இங்கில்லை
ஆறிலும் நீ இறக்கிவிட படலாம்
அறுபதிலும் நீ இறக்கிவிட படலாம்
நீ செய்த பாவத்தை
உன் வாழ்வு முடிவதற்குள்
தண்டனை பெற்று
தப்பிக்க வேண்டும்
இல்லையென்றால்
பாவக்கணக்கு
உன் பிள்ளைகளுக்கும்
தொடரும்
புண்ணியத்துக்கும் அளக்கும்
கோல் ஒன்று தான்
ஊழ்வினை உறுத்து வந்து
ஊட்டுவது கோவலன்
காலத்துக்கு மட்டுமல்ல
உன் காலத்துக்கும் தான்
ஆறு ஏக்கர் இருந்தாலும்
ஆறடி தான் உனக்கு
அந்த ஆறடியும் உனக்கல்ல
அடுத்தவர் வந்துவிட்டால்
மரணத்தின் தேதி மட்டும்
மனிதனுக்கு தெரிந்து விட்டால்
மரணத்தின் தேதி மட்டும்
மனிதனுக்கு தெரிந்து விட்டால்
தேதியை கிழித்தே அவன்
தேய்ந்து போவான்
தட்டு நிறைய உணவு இருக்கும்
அது தள்ளி விட்டாலும்
உள்ளே போகாது
கனவுகள் ஆயிரம் இருக்கும்
அது கருத்தில் இருக்காது
காப்பீட்டு நிறுவனத்துக்கு
வாய்ப்பூட்டு போடப்பட்டு விடும்
சாவும் காலம் குறித்துக் கொண்டு
காலன் வருவான்
அவனுக்கு முன்பு
கடன் கொடுத்தவன்
வந்துவிடுவான்
உயில் பத்திரத்திலேயே
அது அமுல் படுத்தும்
தேதி வந்துவிடும்
அடுத்த மாத மளிகை பில் கூட
கொஞ்சம் குறைந்து விடும்
மருத்துவமனைகளுக்கு இனி
மதிப்பு இருக்காது
கூலிக்கு கொலை செய்யும்
கூலிப்படைக்கு
வேலை போய்விடும்
ஆயுள் தண்டனை
கொடுக்கும்
நீதிபதிக்கும்
ஆயுள் தெரிந்துவிடும்
இன்றே உனக்கு மரணம்
என்று எண்ணிக்கொண்டால்
பொறாமை கொள்ள மாட்டாய்
பொய் பேச மாட்டாய்
புறம் பேசி திரிய மாட்டாய்
புதிய மனிதனாக வாழ்வாய்
நாலு பேர் வாழ்த்த
வாழ்ந்துகாட்டு
அந்த மரணத்திற்கு கூட
மரணத்தை
கொடுக்கலாம்
மாரிமுத்து ஜெகநாதன்
உருக்குலைந்த உடலோடு
பதிலளிநீக்குஉறவுகள் வாழ்ந்திட
கூடாதே என
உருவாக்கியவன்
உருவாக்கியது
உயிர் போன
உடலுக்கு
துர் வாடை..!
ஞயமான..ஞானோபதேசம்..!.
"ஆறு ஏக்கர் இருந்தாலும்
பதிலளிநீக்குஆறடி தான் உனக்கு
அந்த ஆறடியும் உனக்கல்ல
அடுத்தவர் வந்துவிட்டால்"
பல செய்திகளை உள்ளடக்கி கூறுகிறது. இந்த வரிகள்